Tholi Prema: 25 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸான பவன் கல்யாண் படம் – நெகிழ்ச்சியில் தமிழ் இயக்குநர்!

தெலுங்கில் பவன் கல்யாண் நடித்து 1998ல் வெளியான ‘தொலி ப்ரேமா’, இப்போது வெள்ளிவிழா ஆண்டைக் கொண்டாடுகிறது. அந்தப் படம் வெளியாகி 25 வருடம் ஆனதையொட்டி, டோலிவுட்டில் அதை ரீ-ரிலீஸ் செய்திருக்கிறார்கள். இந்தப் படத்தை இயக்கியவர் நம்மூர் காரரான ஏ.கருணாகரன். இந்தப் படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு, ‘ஆனந்த மழை’ என்ற பெயரில் வெளியானது. தெலுங்கில் ஒரு கல்ட் கிளாசிக் படமாகவும், பவன் கல்யாணின் கரியரில் பெரிய பிரேக்காகவும் அமைந்த இப்படம் குறித்து இங்கே குதூகலமாகப் பேசுகிறார் இயக்குநர் ஏ.கருணாகரன். 

லிங்குசாமி, ஏ.ஆர்.முருகதாஸுடன் கருணாகரன்

“ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. 1998-ல் ‘தொலி ப்ரேமா’ வெளியான போது எப்படி ஒரு பெரும் வரவேற்பு கிடைச்சதோ, அது 25 வருஷத்துக்குப் பிறகும் கிடைச்சிருக்கறது சந்தோஷமா இருக்கு. நான் சினிமா வாய்ப்பு தேடும் காலங்களில் நட்பு வட்டத்தில் லிங்குசாமி சார், சசி சார், பாலசேகரன் சார், ஏ.ஆர்.முருகதாஸ் சார்னு நிறையப் பேர் இருந்தோம். லிங்கு சாரின் நட்பு வட்டத்தில் முதலில் இயக்குநர் ஆனது நானாகத்தான் இருப்பேன். ‘தொலி ப்ரேமா’ தமிழில் ‘ஆனந்த மழை’யாக வெளியானது.

அல்லு அர்ஜுனுடன் இயக்குநர் கருணாகரன்

இயக்குநர் கதிர் சார்கிட்டதான் உதவியாளரா இருந்தேன். ‘காதல் தேசம்’ படத்துல ஒரு கிளாப் போர்டு அடிக்கறவனா சேர்ந்து அந்தப் படம் முடியும் போது ஒரு அசோஷியட் ஆக உயர்ந்தேன். ‘காதல் தேசம்’ எனக்குத் தெலுங்கு தேசக் கதவைத் திறந்து வெச்சது. என் முதல் பட வாய்ப்பு தெலுங்கில் அமைய, அதுவும் பவன் கல்யாண் சார் படம்னதும் இன்னும் மகிழ்ச்சியாகிடுச்சு. கதிர் சார் படம் மாதிரி நானும் அழகான படம் கொடுத்துடுவேன்னு பவன் கல்யாண் சார் என் மீது நம்பிக்கை வச்சார். அப்ப தெலுங்கில் எனக்கு ஒரு வார்த்தை கூட தெரியாது. படப்பிடிப்பில் எனக்காக பவன் சார், பொறுமையாக இருப்பார். அருமையான மனிதர்.

‘தொலி ப்ரேமா’னா தமிழ்ல ‘முதல் காதல்’னு அர்த்தம். இந்தப் படத்தை எல்லாரும் இன்னைக்கும் கொண்டாட பவன் சார்தான்  காரணம். இதையடுத்து மீண்டும் தெலுங்கில் பிசியானேன். அங்கே அடுத்தடுத்து படங்கள் பண்ணினேன். அல்லு அர்ஜுன் சாரோட ‘ஹேப்பி’, வெங்கடேஷ் சாரோட ‘வாசு’, பிரபாஸ் சாரோட ‘டார்லிங்’, மறுபடியும் பவன் கல்யாண் சாரோட ‘பாலு ஏபிசிடிஇஎஃப்ஜி’னு அங்கே டாப் ஹீரோக்களின் படங்களையும் இயக்கினேன்.

இயக்குநர் ஏ.கருணாகரன்

அதனால தொடர்ந்து அங்கேயே கவனம் செலுத்திட்டு இருக்கேன். ‘தொலி ப்ரேமா’வின் ரீ-ரிலீஸ் இவ்ளோ பெரிய வசூலை வாரி குவிக்கும்னு எதிர்ப்பார்க்கல. நான் தியேட்டர் விசிட் போய்ப் பார்த்தபோது அந்தக் கொண்டாட்டத்தை உணர முடிஞ்சது. அந்தச் சந்தோஷ தருணங்களால் பேட்டரி ஃபுல் சார்ஜ் ஆனது மாதிரி ஒரு புது உற்சாகம் கிடைச்சிருக்கு. அந்த எனர்ஜியோடு என் அடுத்த பட அறிவிப்பையும் சீக்கிரமே வெளியிடப் போறேன்” எனச் சிலிர்க்கிறார் கருணாகரன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.