அதிர்ச்சி.. தமிழகத்தின் முக்கிய ரயில்களில் 2-ம் வகுப்பு பெட்டிகள் அகற்றம்.. ஏசி பெட்டிகள் அதிகரிப்பு

டெல்லி:
தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் 7 முக்கிய ரயில்களில் 2-வகுப்பு பெட்டிகள் அகற்றப்பட்டு அதற்கு பதிலாக ஏசி பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியாவிலேயே மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயில் மத்திய அரசு பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. குறிப்பாக, நஷ்டத்தில் இயங்கி வரும் ரயில்வே துறையை தனியார் வசம் ஒப்படைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக ஒரு பேச்சு உள்ளது.

மொத்தமாக இல்லாமல், சிறிது சிறிதாக இந்த தனியார்மய நடவடிக்கை இருக்கும் என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. அதாவது, ரயில்வேயில் சில பணிகள், சில வழித்தடங்களை தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.

இரண்டாம் வகுப்பு பெட்டிகள்:
இந்நிலையில், தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வரும் 7 முக்கிய ரயில்களில் இரண்டாம் வகுப்பு பெட்டிகளை ரயில்வே அகற்றியுள்ளது. அதன்படி, கோவை – ராஜ்காட் (குஜராத்) எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் அகற்றப்பட்டிருக்கின்றன. அவற்றுக்கு பதிலாக 4 ஏசி பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. எனவே இனி ராஜ்காட் எக்ஸ்பிரஸ் ரயிலில் இனி 8 ஏசி பெட்டிகளும், 9 இரண்டாம் வகுப்பு பெட்டிகளும், 3 முன்பதிவில்லா பெட்டிகளும் இருக்கும்.

கோவை – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்:
கோவை – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் அகற்றப்பட்டு, ஏசி பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. அதன்படி, ராமேஸ்வரம் – கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் இனி 8 ஏசி பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு பெட்டிகல், 3 முன்பதிவில்லா பெட்டிகள் இருக்கும். அதேபோல, எழும்பூர் – ஜோத்பூர் விரைவு ரயிலில் 5 இரண்டாம் வகுப்புகள் பெட்டிகள் அகற்றப்பட்டு, 6 ஏசி பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கின்றன.

சென்னை – நாகர்கோயில் எக்ஸ்பிரஸ்:
சென்னை – நாகர்கோவிலில் விரைவு ரயிலில் 5 இரண்டாம் வகுப்பு பெட்டிகள், ஒரு முன்பதிவில்லா பெட்டி நீக்கப்பட்டு 6 ஏசி பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. மன்னார்குடி – பகத் கி கோதி ரயிலில் 4 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் அகற்றப்பட்டு 4 ஏசி பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் – ஒகா (குஜராத்) விரைவு ரயிலில் 5 இரண்டாம் வகுப்பு பெட்டிகள், ஒரு முன்பதிவில்லா பெட்டிக்கு பதிலாக 6 முதல் வகுப்பு பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரல் – லோக்மானிய திலக் விரைவு ரயிலில் ஒரு முன்பதிவில்லா பெட்டி ஏசி பெட்டியாக மாற்றப்பட்டுள்ளது.

3 மடங்கு கட்டணம்:
இரண்டாம் வகுப்பு பெட்டிகளுடன் ஒப்பிடுகையில் ஏசி பெட்டிகளுக்கு 3 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அப்படி இருக்கையில், இரண்டாம் வகுப்பு பெட்டிகள் அகற்றப்பட்டு ஏசி பெட்டிகள் அதிகரிக்கப்பட்டிருப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களை வெகுவாக பாதிக்கும். இந்த மாற்றம் இம்மாத இறுதியில் அமலுக்கு வரும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.