நியூயார்க்,அமெரிக்காவில் இந்திய துணை துாதரகத்துக்கு, காலிஸ்தான் ஆதரவாளர்கள் தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ள நிலையில், இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நம் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தைப் பிரித்து, காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடாக அறிவிக்கக் கோரி, சில சமூக விரோதிகள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் சீக்கியர்கள் சிலர், இந்த விஷயத்தில் தீவிரமாக உள்ளனர்.
அவர்கள் கோவில்கள் மீது தாக்குதல் நடத்துவது, இந்தியாவுக்கு எதிராக போராட்டம் நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மார்ச்சில், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய துணை துாதரகத்தின் முன் போராட்டம் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள், அங்கு இருந்தவர்களை தாக்க முயன்றனர். போலீசார் தலையிட்டதை அடுத்து, அமைதி திரும்பியது.
இதற்கிடையே கனடாவில், ‘காலிஸ்தான் டைகர் போர்ஸ்’ என்ற அமைப்பை துவக்கி, இந்தியாவுக்கு எதிரான சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர், சமீபத்தில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய துணை துாதரகத்துக்கு, கடந்த 2ம் தேதி நள்ளிரவில் வந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர், பெட்ரோலை ஊற்றி, அலுவலகத்தை தீ வைத்து எரிக்க முயன்றனர்.
தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இது தொடர்பான வீடியோவை, சமூக வலைதளத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் நேற்று வெளியிட்டனர்.
இந்த வீடியோவுக்கு, ‘வன்முறைக்கு வன்முறையே தீர்வு’ என தலைப்பு வைத்து, ஹர்தீப் சிங்கை பற்றி புகழ்ந்து பேசியிருந்தனர்.
காலிஸ்தான் ஆதரவாளர்களின் இந்த செயலுக்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இது குறித்து விளக்கம் அளித்த இந்திய துாதரக அதிகாரிகள், ‘தீ வைப்பு சம்பவத்தில் உயிர் சேதமோ, காயங்களோ ஏற்படவில்லை; பெரிய அளவில் பொருட்சேதமும் ஏற்படவில்லை’ என, தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறியதாவது:
சான் பிரான்சிஸ்கோ நகரில் இந்திய துணை துாதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியது, கண்டனத்துக்குரியது.
துாதரக அலுவலகத்தை தீ வைத்து எரிக்க முயற்சித்துள்ளனர். துாதரகங்கள் மீது தாக்குதல் நடத்துவது, வன்முறையில் ஈடுபடுவது ஆகியவை குற்ற நடவடிக்கை. இந்த குற்றங்களில் ஈடுபட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கனடா அரசு உறுதி
வட அமெரிக்க நாடான கனடாவிலும் காலிஸ்தான் ஆதரவாளர்களின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கனடாவில் உள்ள நம் துாதரக அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு, காலிஸ்தான் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் போஸ்டர்களை வெளியிட்டிருந்தனர். இதற்கு, நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். ‘இது போன்ற செயல்களை கனடா அரசு தடுக்காவிட்டால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் பாதிப்பு ஏற்படும்’ என கூறியிருந்தார். இதையடுத்து, கனடா வெளியுறவு அமைச்சர் மெலைன் ஜாலி வெளியிட்ட அறிக்கையில், ‘கனடாவில் உள்ள இந்திய துாதரக அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். துாதரக அதிகாரிகள் பாதுகாப்பு விஷயத்தில் வியன்னா ஒப்பந்தத்தை கனடா பின்பற்றும். துாதரக அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம்’ என்றார். இந்நிலையில், இந்தியா நேற்று கனடா துாதரை அழைத்து, அந்நாட்டில் காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவான நடவடிக்கைகள் அதிகரித்து வருவது குறித்து கண்டனம் தெரிவித்து, உடனடியாகநடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்