பீஜிங்,
சீனாவில் இடைவிடாமல் கொட்டிய மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி, 15 பேர் பலியாகினர்.
நம் அண்டை நாடான சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள மலைப்பகுதிகளில், கடந்த சில நாட்களாக இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து கொட்டிய மழையால், ஆறுகள், நீர்நிலைகள் நிரம்பி பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தால் அதிகளவு பாதிக்கப்பட்ட சோங்கிங் மலைப்பகுதியில் மூன்று கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நிலையில், பலர் வீடுகளை இழந்துள்ளனர்.
பல்லாயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டு உள்ளது.
சிச்சுவான் மாகாணத்தில், பாதுகாப்பு நடவடிக்கையாக 85,000 பேர் வெளியேற்றப்பட்டு, அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில், கடந்த 1998ல் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளப்பெருக்கில் சிக்கி, யாங்ட்சே ஆற்றங்கரையோரம் வசித்தவர்கள் உட்பட 4,150 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, சீனத் தலைநகர் பீஜிங் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவுவதால், பல இடங்களில் அனல்காற்று வீசுகிறது.
அடுத்து வரும் நாட்களில் இங்கு, 40 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் பதிவாகும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது-.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement