A.R.Rahman – என் அசைவுகள் அனைத்தும் அவருடையது.. மனைவியை புகழ்ந்த ஏ.ஆர்.ரஹ்மான்

சென்னை: A.R.Rahman (ஏ.ஆர்.ரஹ்மான்) இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவி குறித்து நெகிழ்ச்சியுடன் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.

ரோஜா படத்தில் அறிமுகமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் முதல் படத்திலேயே தேசிய விருதை வென்று அசத்தியவர். அதன் பிறகு அவர் கோலிவுட்டை ஆட்சி செய்ய ஆரம்பித்தார். அவரது இசையில் வந்த புதிய சத்தங்களும், அவர் போட்ட பல ட்யூன்களும் ரசிகர்களை அவர் வசமாக்கியது. எனவே 90களில் ரஹ்மானின் கொடி உயரவே பறந்தது. பல இயக்குநர்கள் அவரை புக் செய்தனர். தொடர்ந்து பாலிவுட்டுக்கும் சென்றார் அவர்.

இரண்டு ஆஸ்கர்கள்: பாலிவுட்டில் இசையமைத்துக்கொண்டிருந்த ஏ.ஆர். ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார். இந்தியாவில் எப்படி அறிமுகமான முதல் படத்திலேயே தேசிய விருதை வென்றாரோ அதேபோல் ஹாலிவுட்டிலும் தான் அறிமுகமான முதல் படத்திலேயே கோல்டன் க்ளோப் விருதுகளையும், இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் பெற்று அசத்தினார்.

புதுமைகளை புகுத்தும் ஏ.ஆர்.ரஹ்மான்: ஏ.ஆர்.ரஹ்மான் தனது பாடல்களில் எப்போதும் ஏதேனும் ஒரு புதுமையை புகுத்தும் வழக்கம் உடையவர். சமீபத்தில் அவர் இசையமைத்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில்கூட பழங்கால கருவிகளை கொண்டு இசையமைத்தார். அவரது இசையமைப்பில் அண்மையில் பத்து தல, பொன்னியின் செல்வன் 2, மாமன்னன் படங்கள் வெளியாகின.

அப்ளாஸை அள்ளிய மாமன்னன்: மாமன்னன் படத்தில் முதன்முறையாக மாரி செல்வராஜுடன் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான் கதைக்கு தகுந்தபடி தனது இசையை செம்மையாகவே கொடுத்திருந்தார். படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்களுக்குள் எளிதாகவே ஊடுருவியது. இதன் காரணமாக பலரும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பாராட்டை தெரிவித்துவருகின்றனர். இயக்குநர் செல்வராகவன் கூட மாமன்னனில் இடம்பெற்ற நெஞ்சமே நெஞ்சமே பாடலை வெகுவாக புகழ்ந்து தள்ளியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி: இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது மனைவி குறித்து பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், “என்னுடைய மனைவி உண்மையில் ஸ்டைலாக இருப்பதை தீவிரமாக எடுத்துக் கொள்கிறார். அவர்தான் என்னை அலங்கரித்து வருகிறார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக அவர்தான் எனக்கு தேவையான உடைகளை வாங்குகிறார். எனக்கு நன்றாக இருக்கும் என்று நினைத்துதான் அனைத்தையும் வாங்குகிறார்.

கருப்புதான் அவருக்கு புடிச்ச கலரு: என்னுடைய மனைவி ஒரு உடையை வாங்கி வந்து அணிய சொன்னால் நான் அதை வேண்டாம் என்று மறுக்கமாட்டேன். ஆனால், அவருக்கு கருப்பு நிறம் ரொம்ப பிடிக்கும். அதனால் அவர் அடிக்கடி கருப்பு நிறத்தில் இருக்கும் பொருட்களை வாங்கி வருவார். அதனால் நான் ஒரு முறை அவரிடம் வேறு நிறத்தில் வாங்கி தர முடியுமா? என்று கேட்டேன். அதற்கும் அவர் ஒத்துக்கொண்டு பல நிறங்களில் வாங்க ஆரம்பித்தார். என்னைப் பற்றி பல விஷயங்களை நன்கு அறிந்தவர். என் ஒவ்வொரு அசைவும் அவருடையது” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.