சென்னை: விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாக்கியலட்சுமி தொடர் தற்போது பரபரப்பான திருமண எபிசோடை வழங்கி வருகிறது.
தன்னுடைய கணவன் கோபியிடம் போட்ட சவாலையடுத்து இந்த பிரம்மாண்டமான சமையல் கான்டிராக்டை ஏற்கிறார் பாக்கியா.
தன்னுடைய சிறிய டீமை வைத்துக் கொண்டு அவர் இந்த சமையல் டாஸ்கை முடிக்க மிகவும் பிரம்ம பிரயத்தனம் செய்ய வேண்டியுள்ளது. இடையில் கோபி, ராதிகாவின் இடையூறையும் அவர் சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
காபியால் விருந்தினர்களை கட்டிப்போட்ட பாக்கியா: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களின் விருப்பத்தை பெற்றுள்ளது பாக்கியலட்சுமி. இந்தத் தொடரில் கோபி, பாக்கியா மற்றும் ராதிகாவாக நடித்துவரும் நடிகர்கள், அந்த கேரக்டர்களை சிறப்பாக ரசிகர்களிடையே சென்றைடைய செய்துள்ளனர். இந்தத் தொடரின் அடுத்தடுத்த எபிசோட்களை ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெங்காலியில் வெற்றிபெற்ற ஸ்ரீமோயி என்ற தொடரின் ரீமேக்காக இருந்தாலும், இந்தத் தொடர் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தன்னுடைய கணவனின் அடுத்தடுத்த செயல்பாடுகள், தன்னையும் பழனிச்சாமியையும் இணைத்து பார்க்கும் அவரது பார்வை, ராதிகாவிற்காக தன்னுடைய அம்மாவிற்கும் பாக்கியாவிற்கும் விரோதமாக செயல்படும் போக்கு போன்றவற்றால் ஆத்திரத்தற்குள்ளாகும் பாக்கியா, அவரிடம் கேள்வி கேட்கிறார். தொடர்ந்து அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் வீட்டிற்காக கொடுக்க வேண்டிய 18 லட்சத்தை கொடுத்துவிட்டால், அந்த வீட்டை விட்டு வெளியேறுவாரா என்று சவால் விடுகிறார்.
பாக்கியாவின்மீது நம்பிக்கை ஏற்படாத நிலையில், அவர் இந்த டாஸ்க்கை நிறைவேற்ற மாட்டார் என்று நினைக்கும் கோபி, இந்த சவாலை ஏற்கிறார். கோபிக்கு கொடுக்க வேண்டிய 20 லட்சத்தில் முன்னதாக 2 லட்சத்தை கொடுத்துள்ள பாக்கியா, மீதமுள்ள 18 லட்சத்தை ஒரு மாதத்தில் கொடுப்பதாக சவால் விடுகிறார். இதையடுத்து பழனிச்சாமியின் சிபாரிசில், பிரம்மாண்டமான கல்யாண ஆர்டரை கையில் எடுக்கிறார் பாக்கியா.
இந்த கல்யாணத்திற்கு மாப்பிள்ளை வீட்டு சார்பில் ராதிகா மற்றும் கோபி வருகின்றனர். அங்கு பாக்கியா மற்றும் பழனிச்சாமியை இணைத்து பார்க்கும் கோபி, பழனிச்சாமியிடம் சண்டை பிடிக்கிறார். மேலும் பாக்கியாவிடமும் சண்டை பிடிக்க வரும்நிலையில், பாக்கியா முந்திக் கொள்கிறார். தன்னுடைய செயல்பாடுகளை கேள்வி கேட்க அவர் யார் என்று கொதிக்கிறார் பாக்கியா. அவரது கோபத்தின் சூட்டை தாங்க முடியாமல் பின்வாங்குகிறார் கோபி.
தொடர்ந்து மிகப்பெரிய கல்யாண ஆர்டரை கையில் எடுத்ததால், பாக்கியா மற்றும் அவரது குழுவினர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். ஆனாலும் தான் எடுத்துக் கொண்ட கான்டிராக்டை சிறப்பாக முடித்துக் கொடுத்து, பழனிச்சாமிக்கு நல்ல பெயரை பெற்றுத் தர வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுகிறார் பாக்கியா. இந்நிலையில் திருமணத்தில் பங்கேற்க வந்த ராதிகா மற்றும் கோபி இருவரும் பாக்கியாவிற்கு இடைஞ்சலாக இருக்கின்றனர்.
சாப்பிடும் இடத்தில் ஜூஸ் பரிமாறவரும் பாக்கியாவை, அவமானப்படுத்துகிறார் ராதிகா. இதை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்கிறார் கோபி. ஆனால் பக்கத்தில் இருந்து இதை பார்க்கும் பழனிச்சாமி, பாக்கியாவிடம் இருந்து ஜூஸ் ட்ரேவை வாங்கி தானே விருந்தினர்களுக்கு கொடுக்க முன்வருகிறார். அவரது இந்த செயல், பாக்கியாவிற்கு தர்மசங்கடத்தை உருவாக்குகிறது. ஆனாலும் இந்த திருமணத்தில் ஒவ்வொரு டிஷ்ஷையும் சுவைத்து கமெண்ட் சொல்வதில் இருந்து பக்கபலமாக இருக்கிறார் பழனிச்சாமி.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த பிரம்மாண்ட திருமணத்தில் முதல் இரண்டு நாட்களை விருந்தினர்களின் பலத்த பாராட்டுக்களுடன் கடந்துள்ளார் பாக்கியா. இந்நிலையில் திருமண நாளின் காலைப்பொழுதில் அனைவருக்கும் காபி பரிமாறப்படுகிறது. அந்தக் காபியை பருகும் அனைவரும் ஆஹா ஓஹோ என்று பாராட்டுகின்றனர். இந்நிலையில் அங்குவரும் கோபி, ராதிகாவிற்கும் காபி கொடுக்கப்பட சப்பு கொட்டிக்கொண்டு அந்த காபியை குடிக்கிறார் கோபி. ராதிகாவின் முறைப்பையும் பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து காபியை பருகுகிறார்.