இம்பால், வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில், இரண்டு மாதங்களுக்குப் பின் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. குறைந்த அளவிலேயே மாணவர்கள் வந்தாலும், மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு, மெய்டி மற்றும் கூகி சமூக மக்களிடையே, இடஒதுக்கீடு தொடர்பாக மோதல் ஏற்பட்டது.
கடந்த, மே 3ம் தேதி துவங்கி தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்தன; 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. சில நாட்களாக, இந்த ஊரடங்கு உத்தரவு சற்று தளர்த்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ – மாணவியருக்கு பள்ளிகள் திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, இரண்டு மாதங்களுக்குப் பின், மாணவ – மாணவியர் நேற்று பள்ளிக்குத் திரும்பினர்.
குறைந்த எண்ணிக்கையிலேயே மாணவர்கள் வருகை இருந்தாலும், பள்ளி திறக்கப்பட்டுள்ளதற்கு அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். அரசின் இந்த முடிவுக்கு, பெற்றோர் மற்றும் பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
உணவு தட்டுப்பாடு?
மணிப்பூரில், 23 லட்சம் விவசாயிகள், 1.94 ஹெக்டேர் நிலப்பரப்பில் விவசாயப் பணிகளை மேற்கொண்டு வந்தனர். வன்முறை காரணமாக, இரண்டு மாதங்களாக விவசாயப் பணிகள் நடக்கவில்லை. குறிப்பாக, 5,127 ஹெக்டேர் பரப்பில் கடந்த இரண்டு மாதங்களில் நடவுப் பணிகள் நடந்திருக்க வேண்டும். நடவுப் பணிகள் நடக்காததால், 1.54 கோடி கிலோ நெல் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement