sudha kongara : சூர்யா 43.. சுதா கொங்கராவுக்கு சூப்பரா வாழ்த்து சொன்ன ஜி.வி.பிரகாஷ்!

சென்னை: தேசிய விருதை வென்ற சுதா கொங்கரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விரல் விட்டு எண்ணக்கூடிய பெண் இயக்குனர்களில் ஒருவராகவும், தனக்கென ஒரு தனி பாணியும், தான் இயக்கும் படங்களில் பெண் கதா பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவராகவும் இருக்கிறார் சுதா கொங்கரா.

தற்போது சுதா கொங்கரா சூரரைப்போற்று இந்த ரீமேக்கை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இயக்குநர் சுதா கொங்கரா: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பிறந்த சுதா கொங்கரா, சென்னையில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். தமிழில் இவர் துரோகி, இறுதிச்சுற்று, புத்தம் புது காலை, சூரரைப்போற்று , பாவக்கதைகள் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். ஆண்கள் மட்டுமே கோலோச்சி இருந்த சினிமாத்துறையில் பெண்களாலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்துக்காட்டியவர் சுதா கொங்கரா.

சூரரைப்போற்று : 2020ம் ஆண்டில் வெளியாகி வெற்றி பெற்ற சூரரைப்போற்று படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும் பெற்றது. இத்திரைப்படம் 78வது கோல்டன் குளோபில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படப் பிரிவில் திரையிடப்பட்ட 10 இந்திய திரைப்படங்களில் ஒன்று. 93வது அகாடமி விருதுகளில் திரையிடப்பட்டது. ஆனால் பரிந்துரைக்கப்படவில்லை. இந்த திரைப்படம் பல தேசிய விருதுகளையும் பெற்று சாதனை படைத்தது.

தைரியமான பெண்: சினிமாக்களில் கதாநாயகிகளை செட் ப்ராபர்டியாகவும் கவர்ச்சி பதுமையாகவும் மட்டுமே பார்த்து வந்தனர். ஆனால் சூரரைப்போற்று படத்தில், பொம்மி என்ற துணிச்சலான கதாபாத்திரத்தை உருவாக்கி அதில் அபர்ணா பாலமுரளியை தைரியமான பெண்ணாக நடிக்க வைத்திருந்தார்.

G. V. Prakash Kumar conveyed his heartfelt wishes to director Sudha Kongara

இந்தி ரீமேக்: சுதா கொங்கரா தற்போது சூரரைப்போற்று படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார். தமிழில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் அக்ஷய்குமார் நடிக்கிறார். இந்த படத்தையும் சுதா கொங்கராவே இயக்குகிறார். சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைத் தயாரிப்பாளராக இந்த படத்தைத் தயாரிக்கிறது. ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

பாலிவுட்டே திகைக்கப் போகுது: இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் சுதா கொங்கராவிற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் சூரரைப்போற்று இந்தி பதிப்பில் நீங்கள் செய்த மேஜிக்கை உலகம் காண காத்திருக்கிறேன்… பாலிவுட்டே திகைக்கப் போகுது, அதற்குப் பிறகு தமிழில் இது… என்று சூர்யாவுடன் சுதா கொங்கரா இணையும் அடுத்தப்படம் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

சூர்யா 43: சூரரைப்போற்று படத்தின் சூப்பர் வெற்றிக்குப் பிறகு சூர்யா, சுதா கொங்கரா மற்றும் ஜி.வி. பிரகாஷ் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய உள்ளதாக சோஷியல் மீடியாவில் செய்திகள் வெளியாகி வந்தாலும், இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த அறிவிப்பை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.