பொழுதுபோக்குத் துறையில், பெண்கள் வகிக்கும் முக்கிய பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ‘மைத்ரி- The Female First Collective’ என்ற உரையாடல் நிகழ்ச்சியினை அமேசான் பிரைம் வீடியோ நடத்தி வருகிறது.
இதில் பெண் கலைஞர்கள் தங்களுடைய அனுபவங்களையும், தொழில்துறையில் இருக்கக்கூடிய சவால்களையும் பற்றியும் பகிர்ந்து கொள்வார்கள். இந்த வருடம் சென்னையில் நடைபெற்ற இந்த உரையாடல் நிகழ்ச்சியில் அமேசான் பிரைம் வீடியோவின் இந்தியா ஒரிஜினல்ஸ் தலைவர் அபர்ணா புரோஹித், இயக்குநர் சுவாதி ரகுராமன், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளரான ரேஷ்மா கட்டாலா, மாளவிகா மோகனன், மது, ஐஸ்வர்யா ராஜேஷ், யாமினி யக்னாமூர்த்தி உள்ளிட்ட சில பிரபலங்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

இதில் நடிகை மாளவிகா மோகனன் தன் கரியரில் தான் சந்தித்த அனுபவங்கள் குறித்தும் திரையுலகில் நடக்கும் சில விஷயங்கள் குறித்தும் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
இதுகுறித்து பேசிய அவர், “ஒரு நடிகை வெற்றி அடைய வேண்டும் என்றால், மிகப்பெரிய ஸ்டார் நடிகருடன் நடித்தால் போதும் என்ற ஒரு பிம்பம் திரையுலகில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பெண் நடிகைக்கும் இதுவே கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது. மற்றவர்களைப் பற்றித் தெரியாது. ஆனால் எனக்கு இதுபோன்ற அனுபவங்கள் உண்டு. நான் நடிக்கத் தொடங்கியபோது பெரிய ஸ்டார் நடிகர்களுடன்தான் நடிக்க ஆசைப்பட்டேன்.
ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் கதாநாயகர் யார் என்பதை பொறுத்துத்தான் அந்தப் படத்தில் நடிக்கச் சம்மதிப்பேன். ஆணாதிக்கம் என்பது இந்தச் சமூகத்தில் அந்தளவிற்கு வேரூன்றி இருக்கிறது. கதாநாயகனுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும்போது அங்குத் திறமைக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுகிறது. பின் எனக்கு என் அம்மா கூறிய சில விஷயங்கள் நினைவிற்கு வந்தன. அவர் நிறைய மலையாளப் படங்களைப் பார்ப்பார்.

எனக்கு 20-21 வயது இருக்கும்போது 60 மற்றும் 70களில் நடிகைகள் அற்புதமான கதாபாத்திரங்களில் நடித்தனர் என்று என்னிடம் அம்மா சொல்லிக்கொண்டே இருப்பார். அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்பதை நினைத்துப் பார்த்தேன். அப்போது அவர் சொன்னது எனக்குப் புரியவில்லை. ஆனால் இப்போது புரிகிறது. சமூகம் கட்டமைத்து வைத்த அந்தக் குறிப்பிட்ட வட்டத்தைவிட்டு வெளியே வந்தால் மட்டுமே அது நமக்கான அடையாளத்தை உருவாகும் என்பதை உணர்ந்தேன்” என்று அவருடைய அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அபர்ணா புரோஹித், “சமத்துவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போது அது இளம் பெண்களுக்கு ஒரு உத்வேகமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி அவர்கள் குரல் எழுப்புவதற்கும், நல்ல நிலையை அடைவதற்கும் உதவியாக இருக்கிறது.

மாற்றம் என்பது படிப்படியாகத்தான் நிகழும் என்பது நமக்குத் தெரியும். நாடு முழுவதும் இந்த உரையாடல் நிகழ்ச்சியை நடத்த வேண்டும். இந்நிகழ்ச்சியை சென்னையில் நடத்தியதில் மகிழ்ச்சி அடைகிறோம். சமத்துவம், பன்முகத்தன்மை பற்றி உரையாடுவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.