சூர்யா நடிப்பில் ஹரியின் இயக்கத்தில் வெளியான `சிங்கம் 2′, நேற்றுடன் 10 ஆண்டுகளைக் கொண்டாடுகிறது.
இயக்குநர் ஹரி, சூர்யாவின் கூட்டணி என்றாலே திரைக்கதை ஜெட் வேகத்தில் பரபரக்கும் கதையாகத்தான் இருக்கும். அதிலும் ‘சிங்கம்’ சீரிஸ், ரிப்பீட் ஆடியன்ஸை அள்ளிய படங்களாகத்தான் இருக்கும். அதிலும் குறிப்பாக ‘சிங்கம் 2’ சீக்குவல் என்றாலே ஓடாது என்ற மூட நம்பிக்கையை உடைத்து நல்ல திரைக்கதை அமைந்தால் வெற்றிதான் என்பதை மீண்டும் எடுத்துரைத்தது.
இந்தப் படத்தின் மூலம் தமிழில் தனது இரண்டாவது இன்னிங்ஸை அதிரடியாக ஆரம்பித்தார் நடிகர் ரகுமான். இந்தப் படத்தில் அவர் ஹன்சிகாவின் சித்தப்பாவாகவும், வில்லன் டேனி சபானியின் நண்பராகவும் ஒரு பிரதான வில்லனாகவும் நடித்திருப்பார். படம் குறித்த நினைவுகளை ரகுமானிடம் கேட்டேன்.

“என்னோட கரியரில் நல்ல படங்கள் வரிசையில ‘சிங்கம் 2’க்கு எப்பவும் ஒரு இடம் உண்டு. அந்தப் படத்துல எனக்கு நல்ல அங்கீகாரமும் கிடைச்சதுல ரொம்ப திருப்தியானேன். ஏன்னா, அதுல வில்லனா நடிக்கக் கேட்டதும், கொஞ்சம் தயக்கம் இருந்துச்சு. ஆனா ஏற்கெனவே ‘சிங்கம்’ பெரிய சக்சஸ். ஹரி சார், சூர்யானு நல்ல டீம் ஒண்ணு சேர்ந்திருக்கும் படம்ங்கறதால எதிர்பார்ப்பு இன்னும் அதிகமா இருக்கும். இப்படி ஒரு படத்துல நானும் இருக்கேன் என்பதே பெருமைதான். இன்னொரு விஷயம், சினிமா விமர்சனங்களிலும் என் கேரக்டர் பத்தி நல்லாவே எழுதியிருந்தாங்க.
ஹரி சாரோட முதல் முறையா ‘சிங்கம் 2’ல நான் வேலை செய்தேன். தூத்துக்குடியில்தான் படப்பிடிப்பு போச்சு. படப்பிடிப்பில் அவரோட கடின உழைப்பைப் பார்த்து பிரமிச்சிட்டேன். அசுர வேகத்துல உழைப்பார். தூத்துக்குடியே அனலா தகிக்கிற சமயத்துலதான் படப்பிடிப்பு இருந்தது. ஸ்பாட்டுல ஹரி சார் துளியும் ஓய்வு எடுக்கமாட்டார். ஓடிக்கிட்டே இருப்பார். அந்த வெயிலைத் தாக்குபிடிச்சு, அப்படி வேலை செய்யறது நினைச்சு பார்க்கவே ஆச்சரியமா இருக்கு. ஏன்னா, நான், சூர்யா, மத்த நடிகர்கள் எல்லாருமே பத்து நாள்கள் வருவோம். நடிப்போம், அப்புறம் சென்னை திரும்பிடுவோம். ஆனா, ஹரி சார் வேற வேற ஆட்களை வச்சு வெயில்லேயே ஷூட்ல இருப்பார். எல்லா கிரெட்டிஸும் அவருக்குத்தான்!

க்ளைமாக்ஸ் ஃபைட் சீன். சூர்யாவுடன் மோதுவேன். என் தலைக்கு மேலே ரெண்டு கம்பி வளையம் தொங்கிட்டு இருந்தது. நான் அந்த கம்பி வளையத்துல ஒரு கம்பியை மட்டும் பிடிச்சிட்டு, ஆவேசமா பேசிக்கிட்டு இருப்பேன். அந்த கம்பி ரெண்டும் டம்மி கம்பிகள் இல்லை. நிஜமாவே கம்பி வளையங்கள். ஆனா, சீன்ல நடிக்கும் போது அதெல்லாம் நினைவுக்கு வரல. திடீர்னு அந்த கம்பியில ஒண்ணு டங்குனு என் பின் மண்டையில வந்து மோதிடுச்சு. பயங்கரமான வலி…

ஆனாலும், சீன், படுவேகமாகப் படமாகிட்டு இருந்ததால, நானும் கன்டினியூட்டியை விடாமல், வலியையும் பொருட்படுத்தாமல் நடிச்சு முடிச்சிட்டேன். இதைப் பார்த்த ஹரி சாரும், சூர்யாவும் பதறிட்டாங்க. ஆனா, அந்த சீனை இன்னைக்கு வரைக்கும் பாராட்டாதவங்களே இல்லை. ‘சிங்கம் 2’ மொத்தமே மறக்க முடியாத நினைவுகளாகிடுச்சு!” என அழகாய் சிரிக்கிறார் ரகுமான்.