மணிப்பூர்: வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இடதுசாரி எம்.பி-க்கள் குழு ஆய்வு!
பா.ஜ.க ஆட்சி செய்துவரும் மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக, குக்கி-மைதேயி இன மக்களுக்கிடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தின் பல இடங்களில் வெடித்தக் கலவரங்களில், இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவந்து, மணிப்பூரில் அமைதிநிலையை மீட்டெடுக்க மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததால், அங்கு தொடர் பதற்றம் நிலவிக் கொண்டிருக்கிறது. அண்மையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மணிப்பூருக்குச் சென்று அங்கு நிலைமையை நேரில் பார்வையிட்டு, சில சமூக மக்களுடன் பேசினார்.

இந்த நிலையில் மணிப்பூரில் வன்முறை பாதித்த பகுதிகளை இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் குழு இன்று (06-07-2023) முதல் (08-07-2023) வரை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறது. இந்தக் குழுவில் இரு கட்சிகளைச் சேர்ந்த 5 எம்.பி-க்கள் இடம்பெற்றிருக்கின்றனர். இந்தக் குழு தங்கள் ஆய்வை முடித்துக்கொண்டு, 7-ம் தேதி மாநில ஆளுநரைச் சந்திக்கும் எனவும், 8-ம் தேதி இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்திக்கும் எனவும் கூறப்பட்டிருக்கிறது.