சென்னை: விஜய்யின் பிறந்தநாளில் லியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘நான் ரெடி’ பாடல் வெளியானது.
இப்பாடலில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிக்கு பல தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.
அதில், அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் தலைவர் ராஜேஸ்வரி பிரியா என்பவரும் ஒருவர்.
இந்நிலையில், தற்போது அவர் விஜய்யை கைது செய்ய வேண்டும் என போலீஸ் டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
விஜய்யை கைது செய்ய வேண்டும்:விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விஜய் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி வெளியானது. அனிருத் இசையில் வெளியான ‘நான் ரெடி’ என்ற இந்தப் பாடல், ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதேநேரம் இப்பாடலில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சியும், மது அருந்துவதை தூண்டும் வகையில் இருந்த வரிகளுக்கும் எதிர்ப்பு கிளம்பியது.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதேபோல், இதற்கு முன்பு பாமக மகளிரணி பொறுப்பில் இருந்த ராஜேஸ்வரி பிரியா என்பவரும் கண்டனம் தெரிவித்திருந்தார். இவர் தற்போது அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் ராஜேஸ்வரி பிரியா தற்போது விஜய்யை கைது செய்ய வேண்டும் என புகாரளித்துள்ளார்.
அதாவது, லியோ படத்தில் இடம்பெற்றுள்ள ‘நான் ரெடி’ பாடல் முழுவதுமே “சரக்கு… தம்..” என போதை ஏற்றும் வார்த்தைகள் கொட்டி கிடந்ததால் இதனை தடைசெய்ய வேண்டும் என ராஜேஸ்வரி பிரியா கூறியிருந்தார். இந்நிலையில் இந்த பாடலை எதிர்ப்பதால் விஜய் பணம் கொடுத்து தன்னை ஆபாசமாக திட்ட வைப்பதாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ராஜேஸ்வரி பிரியா. இதனால், டிவிட்டரில் தன்னை டேக் செய்து ஆபசமாக சிலர் திட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து டிஜிபி அலுவலகத்தில் விஜய்யை கைது செய்ய வேண்டும் என புகார் கொடுத்துள்ளார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், லியோ படத்தின் ‘நான் ரெடி’ பாடல் “மது, புகை உடல் நலத்திற்கு கேடு” என்ற விழிப்புணர்வு வாசகம் இல்லாமல் வெளியானது. அதுமட்டும் இல்லாமல் இந்தப் பாடலில் இடம்பெற்ற அனைத்து வரிகளும் சிகரெட், மது சம்பந்தமாகவே இருந்தது. இதுபோன்ற வரிகள் இளைஞர்களையும் சிறுவர்களையும் பாதிக்கும் வண்ணம் இருந்தது.
அதனால், இந்த வரிகளை நீக்க வேண்டும் என ஒரு பேட்டி கொடுத்திருந்தேன். அது பலரது கவனத்தையும் ஈர்த்ததால் விஜய்யால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால், பல போலி ட்விட்டர் ஐடியை பயன்படுத்தி, பலருக்கும் பணம் கொடுத்து தன்னை பற்றி ஆபாசமாக திட்ட வைத்தார் விஜய். மக்கள் நலனுக்காக மதுவை ஒழிக்க வேண்டும் என போராடி வரும் தன்னை ஆபசமாக திட்ட விஜய் தான் காரணம். தனனை திட்டி போடப்படும் டிவிட்டர் பதிவுகளில் விஜய்யையும் டேக் செய்கின்றனர்.
‘ஆடை’ படம் வெளியான போது அமலா பாலின் நிர்வாண போஸ்டரை ஒட்ட விடாமல் தடுத்தது, கஞ்சா பூ கண்ணால என்ற பாடலை எதிர்த்து பேட்டி கொடுத்தது, சர்க்கார் படத்தில் விஜய் சிகரெட்டுடன் வரும் காட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்தது என பல பிரச்சினைகளில் களமிறங்கியுள்ளேன். நடிகர்கள், நடிகைகள் மீது எவ்வித பேதமும் பார்க்காமல் தான் மக்கள் பணியாற்றுகிறேன் எனக் கூறியுள்ளார் ராஜேஸ்வரி பிரியா.
இந்நிலையில், நான் ரெடி பாடல் விவகாரத்தில், விஜய் தான் தன்னை ஆபாசமாக பணம் கொடுத்து திட்ட வைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் அதற்கான ஆதாரங்களை டிஜிபி அலுவலகத்தில் கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், விஜய்யின் ரசிகர் ஒருவர் தன்னை கொளுத்தி விடுவேன் என மிரட்டுவதாகவும் அச்சம் தெரிவித்துள்ள ராஜேஸ்வரி பிரியா, விஜய்யை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளாராம்.
விஜய்க்கு எதிரான ராஜேஸ்வரி பிரியாவின் இந்த புகாரும், பேட்டியும் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விஜய் தரப்பில் இருந்து இதுவரை எந்தவித ரியாக்ஷனும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.