ஆரஞ்சு கலர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்… ஏன் கலர் மாறுது? மத்திய அரசு இறக்கும் புது பிளான்!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் முக்கியமான திட்டங்களில் ஒன்றாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை பார்க்கப்படுகிறது. நாட்டில் அதிவேகமாக பயணிக்கக் கூடிய வகையில் முக்கிய நகரங்களை இணைக்கும் வண்ணம் படிப்படியாக ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 25 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதன்மூலம் 50 வழித்தடங்களுக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் கிடைத்துள்ளது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

இதில் முதல் தர வசதிகள் ஏராளமாக இடம்பெற்றுள்ளன. பயணிகளுக்கு சொகுசான பயண அனுபவத்தை வழங்குகிறது. நவீன கவாச் தொழில்நுட்ப பாதுகாப்பு வசதிகள் வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் இருக்கின்றன. அதிகபட்சமாக 160 கிலோமீட்டர் வேகம் வரை இயக்கக்கூடிய வகையில் ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ரயிலையும் பிரதமர் மோடி முன்னின்று தொடங்கி வைத்து வருகிறார். இதில் சென்னைக்கு இரண்டு விதமான சேவைகள் கிடைத்துள்ளன.

சென்னைக்கு ரயில் சேவைகள்

அவை சென்னை டூ மைசூரு, சென்னை டூ கோவை ஆகும். அடுத்தகட்டமாக சென்னை டூ செகந்திராபாத், சென்னை டூ விஜயவாடா, சென்னை டூ கன்னியாகுமரி ஆகிய வழித்தடங்களில் புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் குறுகிய தூர பயணங்களுக்கு வந்தே மெட்ரோ ரயில் சேவைகளை கொண்டு வர ஆலோசித்து வருகிறது. அதில், சென்னை டூ திருப்பதி வழித்தடமும் இடம்பிடித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரயில்வே துறை நடவடிக்கை

பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறப்படும் ஆலோசனைகளின் அடிப்படையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் இதுவரை 25 விஷயங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது வெள்ளை நிறத்தில் நீல நிற பட்டைகள் உடன் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் ஆரஞ்சு நிறத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை ஐ.சி.எஃப் தொழிற்சாலை

இதற்கான நடவடிக்கைகள் சென்னை ஐ.சி.எஃப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக தயாரிக்கப்பட்டுள்ள ஆரஞ்சு நிற வந்தே பாரத் ரயிலை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நேற்று நேரில் ஆய்வு செய்தார். இந்த ரயிலில் ஆரஞ்சு, கிரே, வெள்ளை ஆகிய நிறங்கள் காணப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக பார்ப்பதற்கு காவி நிறம் போல காட்சி அளிக்கிறது.

அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆய்வு

இதனால் பாஜக அரசு தனது இந்துத்துவா அரசியலை ரயில்வே துறையிலும் புகுத்துகிறதோ என்ற கேள்வியை எழுப்பியது. இத்தகைய சந்தேகம் எழக்கூடாது என்று உடனடியாக அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விளக்கம் கொடுத்துள்ளார். தேசிய கொடியில் உள்ள ஆரஞ்சு நிறத்தில் இருந்து தான் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்க்கு அதே நிறத்தை கொடுக்கும் எண்ணம் வந்ததாக பதிலளித்துள்ளார்.

ஆரஞ்சு நிறத்தில் ரயில்

ஏன் வெள்ளை நிறம் மாற்றப்படுகிறது என ரயில்வே தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் வெள்ளை நிறத்தில் இருப்பதாக அதிகப்படியாக அழுக்கு சேர்ந்து விடுகிறது. இதனை சுத்தம் செய்ய நிறைவு செலவாகிறது. எனவே தான் மாற்று ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறினர்.

இந்த ஆரஞ்சு நிற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் உடனடியாக அமலுக்கு வராது எனத் தெரிகிறது. சோதனை ஓட்ட முறையில் பயன்படுத்தப்பட்டு அதன்பிறகே அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.