புதுடெல்லி: மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தங்கை லட்சுமி அம்மாள் வாரணாசி வீட்டில் சில ஆண்டுகள் வாழ்ந்தார். இந்த வீடு வாரணாசியில் தமிழர்கள் அதிகமாக வாழும் அனுமர் படித்துறை பகுதியில் சிவமடம் எனும் பெயரில் உள்ளது. இந்த வீட்டில் வாழ்ந்த தங்கை லட்சுமி அம்மாளுக்கு ஒரே ஒரு மகனாகப் பிறந்தவர் கே.வி.கிருஷ்ணன். இவர் தம் குடும்பத்துடன் அதே வீட்டில் வாழ்ந்தார். இவர் நேற்று காலை 9.00 மணிக்கு மறைந்தார். அவருக்கு வயது 95.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் கிருஷ்ணனின் மகள் ஜெயந்தி முரளி கூறும்போது, ‘‘நேற்று இரவு வழக்கம் போல் உறங்க சென்றார். விடியற்காலை 5.00 மணிக்கு எழுந்தவர் படுக்கையிலிருந்தபடி எங்களிடம் பேசினார். பிறகு மீண்டும் படுத்தவர் தனது நித்திரையிலேயே இறைவனடி சேர்ந்து விட்டார்’’ என்றார்.
வாரணாசியிலுள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் நிர்வாகப் பிரிவில் இணைந்து கிருஷ்ணன் பணியாற்றி வந்தார். அவரிடம் இருந்த மிருதங்கக் கலையின் காரணமாக கிருஷ்ணனுக்கு அதேபல்கலைக் கழகத்தின் இசைத் துறையில் பேராசிரியர் பணி கிடைத்தது. இதில் ஓய்வுபெற்ற பிறகும் தனது வீட்டில் அப்பகுதி மாணவர்களுக்கு மிருதங்க பயிற்சி அளித்து வந்தார். கடைசியாக தமிழகத்தின் தஞ்சாவூருக்கு 2015-ல் வந்து மிருதங்கக் கச்சேரி நடத்தி இருந்தார். தனது மிருதங்கப் பயிற்சியை வாரணாசியின் பிரபல இசைக் கலைஞரான அநோகிலால் மிஸ்ரா என்பவரிடம் கற்றுத் தேர்ந்தவர்.
இவர், பாரதியாரின் கவிதைகளை இந்தியில் மொழிபெயர்த்துள்ளார். பாரதியார் வாழ்க்கையை இந்தியிலும் நூலாக எழுதியுள்ளார். இதற்காகவும், தனது கலைக்காகவும் பேராசிரியர் கிருஷ்ணனுக்கு தமிழக அரசின் பாரதி விருது உள்ளிட்ட பல விருதுகள் கிடைத்துள்ளன. உத்தர பிரதேச அரசின் இந்தி சன்ஸ்தான் சார்பிலும் பேராசிரியர் கிருஷ்ணனுக்கு விருது அளிக்கப்பட்டிருந்தது. வாரணாசியில் தென் இந்தியர் சங்கம், காசி தமிழர்கள் சங்கம் ஆகியவற்றின் தலைவராகவும் இருந்தார்.
பேராசிரியர் கிருஷ்ணனின் மனைவி கோமதி கிருஷ்ணன் தனது 75 வயதில் 2006 அக்டோபரில் இறந்தார். இவர்களுக்கு ஒரு மகன், நான்கு மகள்கள் உள்ளனர். இதில், மூத்த மகன் கே.ரவிகுமார், அதே வீட்டில் வாழ்ந்து வருகிறார். மகள்களான ஹேமா ஆத்மநாதன், நீலா நடராசன், ஆனந்தி ஸ்ரீனிவாசன், ஜெயந்தி முரளி ஆகியோர் உள்ளனர். இவர்களில் நீலா நடராசன் சென்னையில் வசிக்கிறார்.
கடந்த வருடம் இறுதியில் வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நடைபெற்றது. அப்போது மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், ஜெய்சங்கர் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோர் பேராசிரியர் கிருஷ்ணனை சந்தித்து மரியாதை செய்திருந்தனர். பேராசிரியர் கிருஷ்ணனின் இறுதிச் சடங்கு நேற்று மாலை 7.00 மணிக்கு அருகிலுள்ள மணிக்கன்கா படித்துறை மயானத்தில் நடைபெற்றது. தனது மறைவிற்கு முன்பாக பேராசிரியர் கிருண்னன் அளித்த அனுமதியின் பேரில்தான் அவரது சிவமடம் வீட்டின் ஒருசிறு அறையில் பாரதியாருக்கு தமிழக அரசு சார்பில் நினைவிடம் அமைந்துள்ளது நினைவுகூரத்தக்கது.