மதுரை: மதுரை வண்டியூர் கண்மாயை ரூ.50 கோடியில் படகு சவாரி உள்பட 12 பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்தி சுற்றுலாத் தலமாக்கும் பணிகளை மாநகராட்சி தொடங்கியது.
மதுரை வண்டியூர் கண்மாய் 550 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. கடந்த காலத்தில் இன்னும் அதிகமான பரப்பில் இருந்த இந்த கண்மாய் தற்போது ஆக்கிரமிப்பால் சுருங்கி வருகிறது. வண்டியூர், கோமதிபுரம், மேலமடை, மானகிரி, தாசில்தார் நகர், அண்ணா நகர், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர இந்த கண்மாய் நீர் ஆதாரமாக உள்ளது.
இந்த கண்மாய் முறையாக தூர் வாரப்படாமல் இருப்பதால், மழைக் காலங்களில் இந்த கண்மாய்க்கு வரும் தண்ணீர் முழுமையாக சேகரமாகாமல் வைகை ஆற்றில் கலக்கிறது.
இந்த கண்மாயை தூர்வாரினால் கடல்போல் தண்ணீர் தேக்கி சுற்றுலாத் தலமாக்கலாம் என கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், பொது மக்களின் கோரிக்கையை ஏற்று முதல்வர் சமீபத்தில் வண்டியூர் கண்மாய் சுற்றுலாத் தலமாக்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி இக்கண்மாயை அழகுபடுத்தி மேம்படுத்தும் திட்டத்துக்கு ரூ. 50 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இந்த திட்டத்தில் கண்மாய் படுகையை பலப்படுத்துதல், படகு சவாரி, கண்மாய் மேற்கு, வடக்கு பகுதி கரையோரம் சைக்கிள் பாதை, நடை பயிற்சி பாதை, யோகா, தியான மையம், சிற்றுண்டி, சிறிய நூலகம், குழந்தைகள், முதியோர், விளையாட்டு உபகரணங்கள், செயற்கை நீரூற்று, ஸ்கேட்டிங் தளம், கராத்தே பயிற்சி மையம், இறகுப்பந்து மைதானம், வாகன நிறுத்துமிடம், நவீன கழிப்பறை, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பூங்காக்கள் உள்ளிட்டவை அமைகிறது.
இப்பணிகளை தொடங்குவதற்கான பூமி பூஜை வண்டியூர் கண்மாயில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி, ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் பிரவீன்குமார், துணை மேயர் நாகராஜன், எம்எல்ஏக்கள் தளபதி, பூமிநாதன், மண்டலத் தலைவர் வாசுகி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இப்பணிகளை மேற்கொள்ளும்போது கண்மாயை ஆழப்படுத்தி அழகுபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.