Court order to take action against Chivingi Tigers death | சிவிங்கி புலிகள் இறப்பு எதிரொலி நடவடிக்கை எடுக்க கோர்ட் உத்தரவு

புதுடில்லி, ‘மத்திய பிரதேசத்தில் உள்ள தேசிய பூங்காவில் பராமரிக்கப்படும் சிவிங்கி புலிகள் தொடர்ந்து இறந்து வருவதால், மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

நம் நாட்டில் சிவிங்கி புலிகள் இனம் அழிந்ததை அடுத்து, அவற்றை மீண்டும் கொண்டு வரும் முயற்சியை கடந்த ஆண்டு மத்திய அரசு முன்னெடுத்தது.

இதன்படி, தென் ஆப்ரிக்க நாடான நமீபியா மற்றும் தென் ஆப்ரிக்காவில் இருந்து, 20 சிவிங்கி புலிகள் ம.பி.,யில் உள்ள குனோ தேசிய பூங்காவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டன.

இவை அனைத்தும் முறையாக பராமரிக்கப்பட்ட நிலையில், கடந்த மார்ச்சில் ஜுவாலா என்ற சிவிங்கி புலி நான்கு குட்டிகளை ஈன்றது.

இதில் மூன்று குட்டிகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. சாஷா, உதய், தக் ஷா என்ற சிவிங்கி புலிகளும் அடுத்தடுத்து இறந்தன.

தேஜாஸ், சூரஜ் என்ற சிவிங்கி புலிகள் இந்த மாதம் உயிரிழந்தன.

இந்நிலையில், சிவிங்கி புலிகளின் தொடர் மரணம் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், ஜே.பி.பார்திவாலா மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:

சிவிங்கி புலிகள் உயிரிழப்பு விவகாரத்தில் மத்திய அரசு சில சாதகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இங்குள்ள சிவிங்கி புலிகளுக்கு சுவாசிப்பதில் ஏதேனும் பிரச்னைகள் உள்ளதா என அறிய வேண்டும்.

தட்ப வெப்பநிலை அவற்றின் உடலுக்கு ஏற்றதாக இல்லையா- என்பதும் தெரிய வேண்டும். இது போன்ற பிரச்னைகள் இருந்தால், ராஜஸ்தானில் உள்ள சிறுத்தைகளுக்கான சரணாலயத்தில் அவற்றை பராமரிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கலாம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.