ஜெய்ப்பூர்: மணிப்பூர் வன்முறையால் முற்றிலுமாக முடங்கியுள்ள நிலையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடியை சரமாரியாக விமர்சித்தார்.
மணிப்பூர் மாநிலத்தில் நடந்த வன்முறை நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அங்குப் பழங்குடி பெண்கள் மீது நடத்தப்பட்ட கொடூரம் தொடர்பான பகீர் வீடியோ நாட்டு மக்களை உலுக்கியது.
அந்த வீடியோ வெளியான பின்னர் தான் பலரும் மணிப்பூர் குறித்துப் பேசத் தொடங்கினர். குறிப்பாக, 79 நாட்களுக்குப் பிறகு பிரதமர் மோடி அப்போது தான் முதல்முறையாக மணிப்பூர் வன்முறை குறித்துப் பேசினார்.
மணிப்பூர் வன்முறை: மேலும், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களையும் பிரதமர் மோடி தனது பேச்சில் குறிப்பிட்டிருந்தார். அதன் பிறகு பல பாஜக தலைவர்களும் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகமாக உள்ளதாக விமர்சித்த வருகின்றனர். ராஜஸ்தானில் உள்ள காங். அமைச்சர் ஒருவரே மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துவிட்டதாகவும் உள்துறை இலாகாவை முதல்வர் வேறு ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியது அம்மாநில முதல்வர் கெலாட்டு சங்கடத்தை ஏற்படுத்தியது.
இந்த சர்ச்சை கருத்துகளைக் கூறிய அவரது அமைச்சர் பதவி அன்றைய நாளே பறிக்கப்பட்டது. இருப்பினும், இதை இப்போது கையில் எடுத்துள்ள பாஜக கெலாட்டையும் காங்கிரஸையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. உண்மையைப் பேசிய ஒருவரைக் காங்கிரஸ் தண்டித்துள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். அதேநேரம் ராஜஸ்தான் ஆண்களின் மாநிலம் என்று கூறிய மற்றொரு அமைச்சரைக் காங்கிரஸ் பாதுகாப்பதாகவும் விமர்சித்தார்.
வீல் சேரில் வந்த கெலாட்: இந்தச் சூழலில் இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜஸ்தான் முதல்வர் கெலாட் பாஜகவை மிகக் கடுமையாக விமர்சித்தார். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வீல் சேரில் காலில் கட்டுடன் வந்த கெலாட், மணிப்பூர் மாநிலத்தில் 100+ பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளதை அம்மாநில பாஜக முதல்வர் பிரேன் சிங்கே ஒப்புக் கொண்டு இருப்பதாகச் சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், “ராஜஸ்தான், சத்தீஸ்கர், மணிப்பூர் ஆகிய மாநில முதல்வர்கள் சட்டம் ஒழுங்கை கண்காணிக்க வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளார். அவர் இப்படிச் சொல்லி இருக்கக் கூடாது. இது ராஜஸ்தான் மக்களின் உணர்வுகளைப் பிரதமர் புண்படுத்தியுள்ளது. மணிப்பூர் அளவுக்கு மோசமான வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இங்கே நடக்கவில்லை.
மணிப்பூரில் என்ன நடக்கவில்லை? இந்தியாவின் 140 கோடி மக்களும் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று பிரதமர் கூறுகிறார். ஆனால், மக்கள் தலைகுனியத் தேவையில்லை.. உங்கள் அரசின் செயல்பாடுகள், தோல்விகள் மற்றும் உங்கள் பொறுப்பற்ற தன்மையால் தான் மக்கள் உண்மையில் வருத்தப்படுகிறார்கள். உள்துறை அமைச்சர் ஒருமுறை அங்கே சென்றார். அதன் பின்னரும் கொலைகள் மற்றும் பலாத்காரங்கள் நடந்துள்ளன.
வெளிநாடு செல்லும் பிரதமர்: பிரதமர் மோடி வெறும் சில நொடிகள் மட்டும் மணிப்பூர் விவகாரம் குறித்துப் பேசுகிறார்.. பிரதமர் மணிப்பூருக்குச் செல்லவில்லை என்றாலும் பிரதமர் அலுவலகத்திலேயே இருந்து கூட்டத்தை நடத்தி இந்த விவகாரத்தை ஆய்வு செய்திருக்கலாம் அவர் பிரசாரத்திற்கு நாட்டில் இருக்கும் பல்வேறு மாநிலங்களுக்குச் செல்கிறார். ஆனால், மணிப்பூர் செல்லவில்லை..
நமது பிரதமர் பல்வேறு நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்பது எங்களுக்குப் பெருமை தான்.. ஆனால், உள்நாட்டில் இருக்கும் மணிப்பூருக்கு அவர் செல்லவில்லை. இத்தனைக்கும் அங்கே பாஜக ஆட்சி தான் நடைபெறுகிறது. அது மட்டும் இப்போது காங்கிரஸ் ஆளும் மாநிலமாக இருந்தால் பிரதமர் மோடி என்னவெல்லாம் சொல்லியிருப்பார்” என்று அவர் விமர்சித்துள்ளார்.