இஸ்ரோ: விண்ணில் செலுத்த தயாராகும் பிஎஸ்எல்வி சி56 – தயார் நிலையில் ஏழு செயற்கைகோள்கள்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தங்களது ஆய்வுக்காகவும், நமது நாட்டின் பல்வேறு துறைகளின் தேவைகளுக்காகவும் செயற்கை கோள்களை அவ்வப்போது விண்ணில் ஏவி வருகிறது.

அதேசமயம் சில தனியார் செயற்கை கோள்களையும், புவியியல் ரீதியாக செயற்கை கோள்களை விண்ணில் ஏவுவதற்கான நில அமைப்பு இல்லாத நாடுகளின் செயற்கைகோள்களையும் விண்ணில் ஏவ உதவி வருகிறது.

அந்த வகையில் இஸ்ரோ சிறிய வடிவிலான பிஎஸ்எல்வி , ஜிஎஸ்எல்வி, எஸ்எஸ்எல்வி ராக்கெட்டுகளை வடிவமைத்து விண்ணில் ஏவி வருகிறது. ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி வர்த்தக ரீதியிலான பிஎஸ்எல்வி- சி55 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

இந்த நிலையில் தற்போது சிங்கப்பூர் நாட்டின் DS SAR புவிநோக்கு செயற்கைகோளுடன் ஆறு சிறிய செயற்கை கோள்கள் PSLV-C56 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

வரும் ஜூலை 30ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு PSLV-C56 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

புகைப்பட கண்காட்சி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.

சிங்கப்பூருக்குச் சொந்தமான டிஎஸ்-சார் (DS-SAR)எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் (New space India Limited)நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

டிஎஸ்-சார் (DS-SAR) செயற்கைக்கோள் மட்டும் 352 கிலோ எடை கொண்டது. சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடிய வகையிலும் இரவு, பகல் என அனைத்து பருவநிலையிலும் துல்லியமான படங்களை எடுத்து வழங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனுடன் வெலாக்ஸ்-ஏஎம், ஆர்கேட், ஸ்கூப் II உள்ளிட்ட 6 சிறிய ரக செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட உள்ளன.

சந்திரயான் 3 விண்கலம் சமீபத்தில் விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில் இன்னும் சில தினங்களில் அடுத்த ராக்கெட்டை விண்ணில் செலுத்த தயாராகி வருவது கவனம் பெற்றுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.