பெய்ஜிங்: சீன வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த கின் கேங் கடந்த ஒரு மாதமாக எங்கு இருக்கிறார் என்றே தெரியாத நிலையில், வாங் யீ இப்போது சீனாவின் புதிய வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நமது அண்டை நாடான சீனாவில் கம்யூனிச ஆட்சி நடந்து வருகிறது. அங்கே ஜி ஜின்பிங் அதிபராக இருக்கிறார். சீனாவில் இரண்டு முறைக்கு மேல் யாரும் அதிபராக இருக்க முடியாது என்ற சட்டம் இருந்தது.
ஆனால், ஜி ஜின்பிங் அதை மாற்றி உயிரிழக்கும் வரை அதிபராக இருப்பது போலச் சட்டத்தை மாற்றிக் கொண்டார். அதேநேரம் ஜி ஜின்பிங் அரசில் இருக்கும் டாப் தலைவர்கள் திடீரென ஒழித்துக்கட்டப்படுவார்கள். அதற்குப் பல தாரணங்கள் சொல்லப்படும்.
மாயம்: இதற்கிடையே சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர் கின் கேங். இவர் கடந்த ஒரு மாதமாகவே எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. பொது நிகழ்ச்சிகள் எதிலும் இவர் கலந்து கொள்வதில்லை. இதற்கிடையே அவர் மாயமாகி ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில், அந்நாட்டின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக வாங் யீ நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று கூடிய சீனாவின் உயர்மட்ட குழு வாங் யீயை வெளியுறவு அமைச்சராகத் தேர்ந்தெடுத்துள்ளதாகச் சீன ஊடகமான சின்ஹுவா தெரிவித்துள்ளது. புதிய வெளியுறவுத் துறை அமைச்சரே நியமிக்கப்பட்ட பிறகும் கூட இத்தனை காலம் வெளியுறவுத் துறை அமைச்சரக இருந்த கின் கேங் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் கடைசி கடந்த ஜூன் 25ஆம் தேதி ரஷ்ய, இலங்கை மற்றும் வியட்நாம் நாடுகளின் அதிகாரிகளுடன் நடந்த மீட்டிங்கில் கலந்து கொண்டார்.
எங்கே இருக்கிறார்: அதுதான் அவர் பங்கேற்ற கடைசி பொது நிகழ்ச்சியாகும். அதன் பிறகு அவர் எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. முதலில் சில தவிர்க்க முடியாத உடல்நிலை காரணங்களால் அவரால் அமைச்சர் பதவியைக் கவனிக்க முடியவில்லை என்று கூறப்பட்டது. இருப்பினும், அதன் பிறகு அவர் எப்படி இருக்கிறார்.. எங்கு இருக்கிறார் என எந்தவொரு தகவலும் இல்லை.
இத்தனை காலம் வெளியுறவு அமைச்சராக இருந்த கின் கேங் சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் நெருக்கமாக இருந்த தலைவர்களில் ஒருவர் ஆவார். இதற்கு முன்பு அங்கு கொண்டாடப்படும் லூனார் புத்தாண்டின் சமயத்திலும் அவர் இதேபோல மாயமாகியிருந்தார். ஆனால், அந்த முறை வெறும் 8 நாட்கள் மட்டுமே அவர் மாயமாகியிருந்தார். அதன் பிறகு அவர் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடங்கினார்.
கடும் கட்டுப்பாடு: ஆனால், இந்த முறை ஒரு மாதமாக அவர் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவரது உடல்நிலை குறித்தும் கூட சீனா எந்தவொரு தகவலும் இல்லை. அவர் மாயமானது குறித்து சீனாவின் சமூக வலைத்தளமான வெய்போவில் யாராவது எதாவது சொன்னால் அதுவும் உடனடியாக நீக்கப்படுகிறதாம். where is Qin Gang எனத் தேடினால் “நோ ரிசல்ட்ஸ்” என்றே வருவதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்தளவுக்கு கின் கேங் குறித்த தகவல்களை மூடி மறைக்கவே சீனா விரும்புகிறது.
ஃபூ சியாவோடியன் என்ற செய்தியாளருடன் கின் கேங் ரகசிய உறவில் இருந்ததாகவும் அவர் திடீரென மாயமாக இதுவே காரணம் என்றும் கூறப்படுகிறது. சீனா அரசில் முக்கிய பதவிகளில் இருப்போர் திருமணத்திற்குப் புறம்பான உறவுகளில் இருக்கக் கூடாது என்று அங்கு அதிகாரப்பூர்வமாகவே தடை இருக்கிறது. இதனால் கின் கேங் மாயமாக இது காரணமாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. அல்லது ஊழல் நடவடிக்கையால் கூட மாயமாகி இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
அவர் எதற்காக மாயமாகி இருந்தாலும் கூட சீனாவாக அதை அறிவித்தால் மட்டுமே உறுதியாகத் தெரியும். இருப்பினும் சீனா ஒரு சர்வாதிகார நாடு என்பதால்.. இதற்கான காரணம் வர வாய்ப்புகள் குறைவு.