குற்றவியல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர், போலீஸ் காவலிலோ, நீதிமன்றக் காவலிலோ இருக்கும்போது வழக்கறிஞர் உதவியுடன் இரண்டு பேர் உத்தரவாதம் அளித்து, அவரை வெளியே அழைத்து வரலாம். இப்படியான சட்ட நடைமுறைக்கு ஜாமீன் என்று பெயர். ஜாமீனில் வந்தாலும், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்.

ஒருவருக்கு ஜாமீன் வழங்கும்போது, அவருக்காக இரண்டு பேர் உத்தரவாதம் அளிக்க வேண்டும். அவரது எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை நீதிமன்றத்தால் விதிக்கப்படுவதும் உண்டு.
ஆனால், குற்றம்சாட்டப்பட்டவர் ஜாமீனில் இருக்கும் காலம் முழுவதும் தான் இருக்கும் இடம் குறித்த ‘லைவ் லொகேஷனை’ வழக்கின் விசாரணை அதிகாரிகளுக்கு தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருக்க வேண்டும் என்கிற உத்தரவை டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது. அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்துவருகிறது.

பல கோடி ரூபாய் நிதி மோசடி தொடர்பான வழக்கில் சக்தி போக் ஃபுட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் ஆடிட்டரான புராரியா 2021-ம் ஆண்டு கைதுசெய்யப்பட்டார். அவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
அந்த உத்தரவில், குற்றம்சாட்டப்பட்டவர் வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடாது.. அவரிடம் பாஸ்போர்ட் இருந்தால் அதை விசாரணை நீதிமன்றத்தில் அளித்துவிட வேண்டும்.. தேவையான நேரத்தில் புராரியா ஆஜராக வேண்டும், விசாரணை அதிகாரி உத்தரவிடும்போது அவர் முன்பாக புராரியா ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டது. இந்த உத்தரவுகள் வழக்கமானவைதான்.
ஆனால், புராரியா தான் இருக்கும் இடம் குறித்த லைவ் லொகேஷனை சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி அபய் எஸ்.ஓகா, நீதிபதி சஞ்சய் கரோல் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்துவருகிறது

ஒருவர் எங்கே இருக்கிறார் என்பது தொடர்பான Google Pin லைவ் லொகேஷனை விசாரணை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும் என்பது சட்டப்படி சரியா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அதாவது, அனைவருக்குமான அடிப்படை உரிமைகளை அரசியல் சாசனப் பிரிவு 21 உறுதிசெய்திருக்கிறது. அந்த உரிமையை மீறும் வகையில் டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவு இருப்பதாக கருத்து எழுந்திருக்கிறது.
இந்த நிலையில்தான், டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவு சட்டப்படியானதா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் ஆராயவிருக்கிறது. லைவ் லொகேஷனை அனுப்ப வேண்டும் என்பது ஒருவரின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயல் என்று கருதப்படுவதால், டெல்லி உயர் நீதிமன்றத்தின் அந்த உத்தரவு ரத்துசெய்யப்பட வாய்ப்பு இருப்பதாக சட்ட வல்லுநர்கள் கருதுகிறார்கள். அல்லது, வழக்கின் கடுமை கருதி, இதுபோன்ற நிபந்தனைகள் தேவைதான் என்ற முடிவுக்கும் உச்ச நீதிமன்றம் வரலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.