இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் 48 மணிநேரத்தில் 718 மியான்மர் நாட்டவர் ஊடுருவி இருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த 718 பேரையும் மியான்மருக்கு திருப்பி அனுப்ப பாதுகாப்பு படையினர் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
மணிப்பூரில் சமவெளி பகுதி மைத்தேயி, மலைப்பகுதி குக்கி இனக்குழுக்களிடையே தொடர் மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. இம்மோதல்களில் இதுவரை 200 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இம்மோதல்களானது குக்கி இனத்தவரை மணிப்பூரில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையை நோக்கியதாக இருக்கிறது என்பது மனித உரிமை ஆர்வலர்களின் குற்றச்சாட்டு.
இதனிடையே மணிப்பூரில் குக்கி இன பெண்கள், மைத்தேயி இனக்குழுவினரால் பலாத்காரம் செய்யப்பட்டு நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ பெரும் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது. இது தொடர்பாக மணிப்பூர் மாநில அரசு கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இச்சம்பவத்தால் மிசோரம் மாநிலத்தில் இருந்து மைத்தேயி இன மக்கள் வெளியேற வேண்டும் என குக்கி இனக்குழுவின் தொப்புள்கொடி உறவுகளான மிசோ ஆயுதக் குழுவினர் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் மிசோரம் மாநிலத்தில் இருந்து மைத்தேயி இனமக்கள் அகதிகளாக அஸ்ஸாம் மாநிலத்தில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
இதனிடையே மணிப்பூர் மாநிலம் சந்தால் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் அதாவது 48 மணிநேரத்தில் 718 மியான்மர் நாட்டவர் சட்டவிரோதமாக ஊடுருவி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 2 நாட்களில் 718 பேர் ஊடுருவி இருப்பது குறித்து மணிப்பூர் மாநில அரசும், அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினரும் மாறி மாறி குற்றம்சாட்டுகின்றனர். மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து சட்டவிரோதமாக ஊடுருவிய 718 பேரும் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினரால் வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.