`செந்தில் பாலாஜியை, ED எப்போதிலிருந்து காவலில் எடுத்து விசாரிக்கலாம்!’ – நீதிமன்றம் இன்று முடிவு
கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்தக் கைதை எதிர்த்து செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அது தொடர்பான வழக்கை நீதிபதிகள் பரத சக்கரவர்த்தி, நிஷா பானு ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். நீதிபதி பரத சக்கரவர்த்தி, “அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை சட்ட்டவிரோதமானது அல்ல… செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை விசாரிக்கலாம்” எனத் தீர்ப்பு வழங்கினார். அதே சமயம் நீதிபதி நிஷா பானு, “அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியைக் கைதுசெய்தது சட்டவிரோதமானது…” எனத் தீர்ப்பு வழங்கினார்.

இதன் காரணமாக இந்த வழக்கு மூன்றாவது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன் வசம் விசாரணைக்குச் சென்றது. விசாரணை மேற்கொண்ட நீதிபதி கார்த்திகேயன், நீதிபதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்புடன் உடன்பட்டார். மேலும், செந்தில் பாலாஜி மருத்துவச் சிகிச்சையிலிருக்கும் காலத்தை, அமலாக்கத்துறையின் காவல் கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும், இந்த வழக்கில், அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை எத்தனை நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்பது குறித்து முன்னதாக விசாரித்த நீதிபதிகள் அமர்வே முடிவு செய்யலாம் என்றும் கூறியிருந்தார். அதன்படி இந்த வழக்கானது இன்று மதியம் 2:15 மணிக்கு நீதிபதிகள் பரத சக்கரவர்த்தி, நிஷா பானு ஆகியோரின் அமர்வு முன்பு விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் முடிவில், அமலாக்கத்துறை எத்தனை நாள்கள் செந்தில் பாலாஜியைத் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்பது குறித்து நீதிபதிகள் முடிவுசெய்வார்கள்.