ஆளுநர் ஆர்என் ரவியை சந்திக்கும் அண்ணாமலை… டிஎம்கே ஃபைல்ஸ்2?

தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை திமுக கட்சி மீது தொடர்ந்து விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். திமுகவை ஊழல் கட்சி என்று குறிப்பிட்டு வரும் அண்ணாமலை தொடர்ந்து அக்கட்சியின் நிர்வாகிகள் மீது ஊழல் புகார்களை முன்வைத்து வருகிறார். அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக பேசியதாக ஆடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதனை தொடர்ந்து டிஎம்கே ஃபைல்ஸ் பார்ட் 1 என்ற பெயரில் திமுக பிரமுகர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இதையடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது திமுக எம்பி டிஆர் பாலு உட்பட பலரும் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர். சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, திமுக ஃபைல்ஸ் 2 ரெடியாக இருப்பதாக கூறினார்.

திமுக ஃபைல்ஸ் 2 விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் இன்று மாலை 3 மணி அளவில் தமிழக ஆளுநர் ஆர்என் ரவியை அண்ணாமலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது திமுக அமைச்சர்களின் சொத்து விவரங்கள் அடங்கிய ஆவணங்களை அண்ணாமலை ஆளுநர் ஆர்என் ரவியிடம் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் டாஸ்மாக் தொடர்பான வெள்ளை அறிக்கையையும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநரிடம் வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அண்ணாமலை, நாளை மறுநாள் முதல் தனது பாத யாத்திரையை தொடங்கவுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.

வரும் 28 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கும் இந்த நடை பயணத்தை, மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா தொடங்கி வைக்கிறார். நடை பயணத்தை தொடங்கிவிட்டால் ஆளுநரை சந்திப்பது கடினமாகிவிடும் என்பதால் இன்றே ஆளுநர் ஆர்என் ரவியை சந்தித்து, அனைத்து ஆவணங்களையும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒப்படைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.