நியூயார்க்-அமெரிக்காவில் சிகிச்சைக்கு வந்த 245 பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மகப்பேறு டாக்டருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரைச் சேர்ந்த மகப்பேறு டாக்டரான ராபர்ட் ஹேடன், 64, கடந்த 1980 முதல் மருத்துவ தொழிலில் உள்ளார்.
கொலம்பியா பல்கலையின் இர்வின் மருத்துவ மையம், நியூயார்க் பிரஸ்பைடிரியன் மருத்துவமனை உட்பட பல்வேறு புகழ்பெற்ற மருத்துவமனையில் இவர் பணியாற்றி உள்ளார்.
ஆயிரக்கணக்கான பெண்களுக்கு பிரசவம் பார்த்துள்ள இவர், தன்னிடம் மருத்துவ பரிசோதனைக்கு வரும் பெண்களில் பலரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 2012ல் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, ராபர்டிடம் சிகிச்சை பெற்ற பல பெண்கள், தங்களிடம் அவர் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் புகார் அளித்தனர்.
அடுத்தடுத்து புகார்கள் குவிந்ததை அடுத்து, இவர் மீது கடந்த 2020ல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது. இதில், கடந்த 1987 முதலே இவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்த வழக்கு குறித்து, நியூயார்க் நீதிமன்றத்தில் மூன்று ஆண்டுகளாக நடந்த விசாரணையில், 245 பெண்களிடம் ராபர்ட் அத்துமீறி நடந்தது உறுதியானது. இதையடுத்து, நீதிபதி ரிச்சர்ட பெர்மன் நேற்று இறுதி தீர்ப்பு வழங்கினார். இதில், ராபர்டுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, ராபர்ட் பணியாற்றிய மருத்துவமனை நிர்வாகங்கள், அவருக்கு எதிராக நஷ்ட ஈடு கோரி வழக்குகள் தொடர்ந்துள்ளன.
கடந்த 2016ல், இதே போன்ற வழக்கில் சிக்கிய ராபர்டுக்கு தண்டனை எதுவும் வழங்கப்படாத நிலையில், அவரது மருத்துவ உரிமம் மட்டும் தற்காலிகமாக பறிக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்