பெர்த், ஆஸ்திரேலியாவில் அடுத்தடுத்து கரை ஒதுங்கிய திமிங்கலங்களை, மீண்டும் கடலுக்குள் விடும் முயற்சி தோல்வி அடைந்ததை அடுத்து, அவை கருணைக் கொலை செய்யப்பட்டன.
பசிபிக் கடல் நாடான ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை பகுதிகளில் ஏராளமான திமிங்கலங்கள் வசிக்கின்றன. இவை அவ்வப்போது கரை ஒதுங்கி, பின் கடலுக்கு செல்வது வழக்கம்.
இந்நிலையில், அல்பானி பகுதியில் உள்ள செயின்ட்ஸ் கடற்கரை பகுதியில் இரு தினங்களுக்கு முன், 100க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் திடீரென கரை ஒதுங்கின. கூட்டம், கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள், மீண்டும் கடலுக்குள் செல்ல முடியாமல் தவித்தன.
இதையடுத்து, அங்கு வந்த வனவிலங்கு ஆர்வலர்கள், கடல்வாழ் விலங்கு நிபுணர்கள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து, அவற்றை மீண்டும் கடலில் விடும் முயற்சியை மேற்கொண்டனர்.
இருப்பினும், அடுத்த சில மணி நேரத்தில், 50 திமிங்கலங்கள் உயிரிழந்தன. இதைத் தொடர்ந்து மீதமுள்ளவற்றை கப்பல்கள், சிறப்பு உபகரணங்கள் ஆகியவற்றின் உதவியுடன் காப்பாற்றும் முயற்சிகள் இரண்டாவது நாளாக நேற்றும் மேற்கொள்ளப்பட்டன.
ஒன்றிரண்டு திமிங்கலங்கள், கடலுக்குள் சென்ற நிலையில், மீதமிருந்த 42 திமிங்கலங்கள் சுவாசிக்க சிரமப்பட்டன. இதையடுத்து, கடலுக்குள் விட முடியாத திமிங்கலங்களை கால்நடை மருத்துவர்கள் கருணை கொலை செய்ய முடிவு செய்தனர்.
இது குறித்து பல்லுயிர் பாதுகாப்பு துறையின் மேலாளர் பீட்டர் ஹார்லி கூறுகையில், ”உயிர்வாழ முடியாமல் சிரமப்பட்ட திமிங்கலங்களை கடினமான மனதுடன் கருணை கொலை செய்தோம். இது திமிங்கலங்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு.
இதிலிருந்து நிறைய பாடங்களை கற்றுக் கொண்டோம். அவற்றின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன,” என்றார்.
சோதனையின் முடிவில் தான் திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதற்கான காரணம் தெரிய வரும் என கடல்வாழ் உயிரினங்களின் நிபுணர்கள் தெரிவித்தனர். கருணை கொலை செய்யப்பட்ட திமிங்கலங்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்