`இப்படி தயாரானால் போட்டித் தேர்வில் நிச்சயம் வெற்றி!’ – மாணவர்களுக்கு வெ. இறையன்பு சொன்ன அறிவுரை!

“இந்திய ஆட்சிப்பணி போட்டித் தேர்வுக்குத் தயாராகும்போது, தினமும் குறைந்தது 17 மணி நேரம் ஒதுக்க வேண்டும். பாடத்திட்டங்களை தாண்டி அனைத்து மேற்கோள் புத்தகங்களையும் வாங்கிப் படிக்க வேண்டும்” என்று ஓய்வுபெற்ற முன்னாள் அரசு தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு மாணவர்களிடம் உரையாற்றினார்.

நூலகத்தை பார்வையிடும் வெ.இறையன்பு

கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற போட்டித் தேர்வுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியில், `படிப்பது சுகமே’ என்ற தலைப்பில், முன்னாள் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் (ஓய்வு) வெ. இறையன்பு கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். அதோடு, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய நூலகத்தினையும் திறந்து வைத்து பார்வையிட்டார்.

தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசிய வெ.இறையன்பு, “கரூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பான ஒரு நூலகத்தை மிக நேர்த்தியாக அமைத்திருக்கிறார்கள். நூலகத்தை பார்வையிட்டபோது, அங்கு ரோசன் என்ற மாற்றுத்திறனாளி, தான் ஒலி வடிவில் வரலாறு குறித்த பாடங்களைப் படிப்பதாகச் சொன்னபோது நான் மிகவும் மகிழ்ந்தேன். தொடர்ந்து, கரூர் மாவட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு, முன்னேற்றம் குறித்து `கரூரின் கண்மணிகள்’ என்ற தலைப்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை பார்வையிட்டேன்.

மாணவர்கள் மத்தியில் பேசும் வெ.இறையன்பு

பெண்கள் வளம்பெற வேண்டும், இடைநிற்றல் குழந்தைகளை பள்ளிக்குக் கொண்டு வர வேண்டும், பெண்களுக்கு ரத்தசோகை பாதிக்கக் கூடாது போன்ற திட்டங்கள் எல்லாம் மிகவும் பாராட்டுக்குரியவை.

போட்டித் தேர்வு என்பது பல்கலை தேர்வுக்கு மாறுபட்டு இருக்கும். அத்தகைய போட்டித் தேர்வுக்கு தயாராகும்போது அதற்கென மனநிலையை உருவாக்கி புரிந்து நன்கு படிக்க வேண்டும். இந்திய ஆட்சிப்பணி போட்டித் தேர்வுக்குத் தயாராகும்போது, தினமும் குறைந்தது 17 மணி நேரம் ஒதுக்க வேண்டும். பாடத்திட்டங்களை தாண்டி அனைத்து மேற்கோள் புத்தகங்களையும் வாங்கிப் படிக்க வேண்டும்.

நீங்கள் எந்தப் போட்டித் தேர்வை தெரிவு செய்வது என்று முடிவு செய்யுங்கள். அதற்கு ஓர் இலக்கு வைத்து தீர்மானித்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் அதில் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் எந்தப் பணியில் இருந்தாலும் சரி, அதை நிறைவாக மேற்கொள்ளுங்கள்.

ஒரு மனிதனுக்கு மதிப்பெண் முக்கியமல்ல. அவன் சமுதாயத்தில் பெறுகின்ற நன்மதிப்பு தான் அவன் பெறும் மதிப்பெண். சமுதாயத்தில் நீங்கள் பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியாவிட்டாலும், நம்மால் முடிந்த மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

மாணவர்கள்

போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும்போது, முதலில் எந்தப் பாடத்தை எடுக்க வேண்டும் என்று முடிவு எடுங்கள். இரண்டாவதாக, அதன் தொடர்புள்ள பாடங்களை தேடுங்கள். மூன்றாவதாக, அதில் உள்ள கருத்துகளைக் குறிப்பு எடுத்துக் கொள்ளுங்கள். போட்டித் தேர்வில் குறிப்பு எடுத்தால் தான் ஒருவர் வெற்றி பெற முடியும்.

உங்களுடைய கல்லூரி தேர்வுகளிலேயே… மருத்துவம் படித்தாலும் சரி, எந்தப் பாடப்பிரிவு படித்தாலும் சரி, உங்கள் ஆசிரியர் வகுப்பறையில் கற்றுக் கொடுப்பதை குறிப்பு எடுத்துப் படிக்க வேண்டும். பின்னர், ஆசிரியர் கொடுத்த குறிப்புகளையும், நீங்கள் எடுத்துப் படித்த குறிப்புகளையும் ஒருங்கிணையுங்கள். அதிலிருந்து உங்களுக்குப் புரியும் வகையில் குறிப்பு எடுத்துப் படியுங்கள். கடினமான பகுதிகளை யாரிடமாவது விவாதியுங்கள். இவ்வாறு செய்தால் படிப்பவை வாழ்நாள் முழுவதும் மறக்காது.

அதேபோல், நீங்கள் மற்றவர்களை விட அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்றால், தெளிவாக எழுத வேண்டும். ஒருவர் நான்கு வரியில் முக்கியமான தகவல்களைக் குறிப்பிட்டால், நீங்கள் ஆறு தகவல்களைக் குறிப்பிட வேண்டும். நீங்கள் அவர் குறிப்பிடாத முக்கியமான தகவல்களையும் குறிப்பிட வேண்டும். அப்படிச் செய்தால், நீங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள். உங்களது விடைகளுக்கு அதிக மதிப்பெண் கிடைக்கும். எனவே, அதிகத் தகவல்களை திரட்டுவதற்கு மூன்றாவதாக ஓர் அட்டவணையை தயாரித்து, அதைப் பின்பற்றிப் படிக்க வேண்டும்.

நூலகத்தை பார்வையிடும் வெ.இறையன்பு

நான் எப்போதுமே சொல்வது, படிப்பதில் ஆறு படிகள் உள்ளன. முதல் தடவை படிக்கும் பொழுது மகிழ்ச்சிக்காகப் படியுங்கள், மனப்பாடம் செய்யாதீர்கள். இரண்டாவதாக, நினைவில் வைத்துக் கொள்ளப் படியுங்கள். மூன்றாவது, படித்ததை சொல்லிப் பாருங்கள். நான்காவது, குறிப்பாக எழுதிப் பாருங்கள். ஐந்தாவது, அதில் இருக்கக்கூடிய குறிப்புகளில் தவறுகளை சரி பார்த்துக் கொள்ளுங்கள். ஆறாவதாக, படித்தது அனைத்தையும் திரும்பிச் சொல்லிப் பாருங்கள். இவ்வாறு இந்த ஆறு படிநிலைகளைப் பயன்படுத்தி படிப்பது மூலம் அனைத்திலும் தேர்ச்சி பெற்று தெளிவு பெற்று விடுவார்கள்.

தேர்வை பொறுத்தவரை எல்லா போட்டித் தேர்வுகளிலும் நேரத்திற்கு ஏற்றவாறு எழுதுவதுதான் முக்கியம். சில மாணவர்கள் நேர மேலாண்மையைக் கடைப்பிடிக்காமல், தெரிந்த விடையைக்கூட எழுதாமல் வந்து விடுகிறார்கள்.

ஆளுமைத் தேர்வு என்பது, உங்கள் அறிவை பரிசோதிப்பதற்காக மட்டுமல்ல. உங்களுக்குத் தலைமைப் பண்பு இருக்கின்றதா, முன்னெடுப்பு இருக்கின்றதா, சரியான சிந்தனை இருக்கின்றதா, உணர்ச்சி மேலாண்மை கட்டுக்குள் இருக்கின்றதா, துணிச்சலான ஒன்றை எதிர்கொள்ள உங்களிடம் படிப்பறிவு இருக்கின்றதா, சபை யோசனை இருக்கின்றதா போன்றவற்றை எல்லாம் பரிசோதிப்பதற்குத்தான்.

நூலகத்தை பார்வையிடும் வெ.இறையன்பு

ஆளுமைத் தேர்விலும் சிறந்த மதிப்பெண்கள் பெற்றால் போட்டித் தேர்வில் ஒட்டுமொத்தமாக வெற்றி பெற்று விட முடியும். எனவே, படிக்கும்போது தாழ்வு மனப்பான்மையுடன் படிக்காமல், தன்னம்பிக்கையுடன் படியுங்கள். போட்டித் தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம்” என்றார்.

தொடர்ந்து, போட்டித் தேர்வு குறித்து மாணவ, மாணவிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார் வெ.இறையன்பு.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.