லண்டன் : நெதர்லாந்து அருகே நடுக்கடலில் சரக்கு கப்பல் திடீரென தீப்பற்றியது. இதை அணைக்க முயன்ற இந்திய ஊழியர் ஒருவர் பலியானார்; 20 பேர் காயமடைந்தனர்.
ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் இருந்து மேற்காசிய நாடான எகிப்துக்கு, சரக்கு கப்பல் ஒன்று சமீபத்தில் புறப்பட்டது.
இந்தக் கப்பலில், 3,000 கார்கள் இருந்தன. ஐரோப்பிய நாடான நெதர்லாந்து அருகே சென்றபோது, 25ம் தேதி கப்பலில் திடீரென தீப்பற்றியது. கப்பலில் பணியாற்றும், 23 ஊழியர்கள், இதை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், தீ வேகமாகப் பரவியது.
இதையடுத்து, ஏழு ஊழியர்கள் கடலில் குதித்து தப்பிக்க முயன்றனர். இவர் களை, அருகிலிருந்த கப்பல்களில் வந்தவர்கள் மீட்டனர். கப்பலில் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து, நெதர்லாந்து கடலோரக் காவல்படை உடனடியாக அங்கு விரைந்தது. ஹெலிகாப்டர் உதவியுடன் ஊழியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர்.
இந்த விபத்தில், இந்தியாவைச் சேர்ந்த கப்பல் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்; காயமடைந்த, 20 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.கப்பலில் உள்ள ஒரு மின்சார காரால் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இரண்டு நாட்களாக தீயை அணைக்கும் முயற்சி நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்தக் கப்பல் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
விபத்தில் உயிரிழந்த இந்தியரின் உடலை நெதர்லாந்தில் இருந்து அனுப்பி வைப்பதற்கான முயற்சி நடக்கிறது. ஆனால், அவருடைய பெயர், அவர் எப்படி இறந்தார் என்ற விபரங்கள் வெளியாகவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement