“ஒரே சூப்பர் ஸ்டார் என்ற சகாப்தம்” முடிந்தது : தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு கருத்து

தமிழ் சினிமா உலகில் அவ்வப்போது ஒரு சர்ச்சைக்கு இறக்கை முளைத்து பறக்க ஆரம்பிக்கும். ஆனால், கடந்த சில வருடங்களாகவே 'சூப்பர் ஸ்டார்' பற்றிய சர்ச்சை பறந்து கொண்டிருக்கிறது. இப்போது “கழுகு, காக்கா, நாய்” என விமர்சித்து பேசும் அளவிற்கு வந்துவிட்டது.

இந்நிலையில் பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளரா எஸ்ஆர் பிரபு ஒரு டுவீட் போட்டு சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு மேலும் நெருப்பைப் பற்ற வைத்துள்ளார். அவர் ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளதை தவறாகப் புரிந்து கொள்ளவும் வாய்ப்புள்ளது. அவர் ரஜினியைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால், சினிமா உலகில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் என்ற சகாப்தம் முடிவடைந்துவிட்டது. இனி பல சூப்பர் ஸ்டார்கள் வரலாம், இருக்கலாம் என்ற அர்த்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“சினிமா வியாபாரத்தில் ஒரு சூப்பர் ஸ்டார் என்பதன் சகாப்தம் முடிந்துவிட்டது. ஒவ்வொரு நட்சத்திரமும் அவரவர் சந்தைப் பங்கைக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு படத்திற்கும் அதன் மதிப்பு, வெளியீட்டுத் தேதி, பொருளடக்கம், உடன் நடிப்பவர்கள், போட்டி ஆகியவற்றால் வேறுபடும்.

இதைப் புரிந்து கொள்ளும் திரையுலகம் ஒருவரை ஒருவர் ஆதரிக்கத் தொடங்கி, ஒட்டு மொத்த சந்தை மதிப்பும் உயர ஆரம்பிக்கும். இது எல்லைகளைத் தாண்டியும் விரிவடையும். இதற்கு சமீபத்திய சிறந்த உதாரணம் தெலுங்குத் திரையுலகம்.

நட்சத்திரங்கள், வியாபாரம், ரசிகர்கள் ஆகியோரும் இதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த புதிய விதி எல்லா இடங்களிலும் மாறும் என நம்புகிறேன். அதனால், அதோடு வர்த்தகம், ரசிகர்கள் ஆகியோருடன் இந்தியத் திரையுலகம் வளரும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் சூர்யாவின் நெருங்கிய உறவினரான எஸ்ஆர் பிரபுவின் கருத்துக்கு பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். சூர்யா நடித்து அடுத்து வெளிவர உள்ள 'கங்குவா' படம் பான் இந்தியா படமாக மட்டுமல்லாமல் பத்து மொழிப் படமாக வெளிவர உள்ளது. அப்படத்தை எஸ்ஆர் தயாரிக்கவில்லை என்றாலும் அதையும் மனதில் வைத்தே தன்னுடைய கருத்தைப் பகிர்ந்துள்ளார் என்று சொல்லலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.