அயோத்தி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. தற்போது 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் 2024 ஜனவரி மாதம் குடமுழுக்குடன் கோவில் திறக்கப்பட உள்ளது. இதற்கிடையே ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் இப்போதே முன்பதிவு செய்து முடிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
பெரிய சட்ட போராட்டத்துக்கு பிறகு உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து 2020ல் அரசு சார்பில் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா எனும் அறக்கட்டளை அமைக்கப்பட்டது.
இந்த அறக்கட்டளை தான் ராமர் கோவில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது 110 ஏக்கரில் ரூ.1000 கோடி செலவில் பிரமாண்டமாக கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு பிரதமர் நரேந்திர மோடி 2020 ஆகஸ்ட் 5ல் அடிக்கல் நாட்டினார். அதைத்தொடர்ந்து பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
கோவில் பீடத்தின் மீது மூன்று அடுக்குகளாக ராமர் கோவில் அமைய உள்ளது. கோவிலின் பீடம் கிரானைட் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் கலைநுட்பத்துடன் சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட தூண்கள், கற்கள், இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து காணிக்கையாக பெறப்பட்ட செங்கற்கள் பயன்படுத்தி கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. 2024ம் ஆண்டுக்குள் இந்த பணிகளை முடித்து பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ராமர் கோவில் வளாகத்தில் ஒரு அருங்காட்சியகம், ஆராய்ச்சி மையம், காப்பக மையம் உள்ளிட்டவையும் அமைய உள்ளது. இந்நிலையில் தான் கோவில் பணிகள் தற்போது 80 சதவீதம் வரை முடிவடைந்துள்ளதாகவும், 2024ல் அயோத்தி ராமர் கோவில் திறக்கப்பட்டு குடகுழுக்கு நடத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதுபற்றி ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சாம்பத் ராய் கூறுகையில், ‛‛அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்து விட்டது. மீதமுள்ள பணிகள் விரைந்து முடிக்கப்படும். கோவில் திறப்பு விழாவில் 10 ஆயிரம் விருந்தினர்களை அழைக்க திட்டமிட்டுள்ளோம்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15 முதல் 24ம் தேதிக்குள் கோவிலை திறக்கலாம் என பிரதமர் மோடிக்கு தேதி அனுப்பி உள்ளோம். இதில் பிரதமர் மோடி கூறும் தேதியில் திறப்பு விழா நடக்கும்” என சாம்பத் ராய் தெரிவித்துள்ளார். இதனால் பக்தர்கள் அயோத்தி ராமர் கோவில் தரிசனத்துக்கு தயாராகி வருகின்றனர்.
அதாவது தேதி மட்டும் உறுதியாகாத நிலையில் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் அடுத்த ஆண்டு ஜனவரியில் திறந்து குடமுழுக்கு விழா நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் தற்போது அயோத்தியில் தங்கும் ஓட்டல்கள், விடுதிகளில் முன்பதிவு தொடங்கி முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து அயோத்தி ஓட்டல் நிர்வாகிகள் கூறுகையில், ‛‛ராமர் கோவில் குடமுழுக்கு எந்தநாளில் நடைபெறும் என்பது மட்டும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் 2024 ஜனவரி 20 முதல் 24ம் தேதி வரையிலான நாட்களில் ஓட்டல்கள், விடுதிகளில் தங்கும் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
மொத்தம் 5,000 அறைகள் உள்ள நிலையில் 4,000 அறைகள் இப்போதே முன்பதிவு செய்து முடிக்கப்பட்டு விட்டது. இன்னும் 1000 அறைகள் மட்டுமே பாக்கி உள்ளன. இது முக்கிய பிரமுகர்களுக்கானது. அரசு அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில் இந்த 1000 அறைகளை மட்டும் ஒதுக்கி வைத்துள்ளோம்” என்றார்.