விழுப்புரம்:
மாணவர்கள் அனைவரும் நீட் தேர்வுக்கு தயாராக இருக்க வேண்டும் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நீட் தேர்வை ஒழிப்போம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்து திமுக ஆட்சியில் அமர்ந்த நிலையில், தற்போது அந்த தேர்வுக்கு தயாராக இருக்குமாறு அமைச்சர் கூறுவதை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
தக்காளி விலை பற்றி கேட்ட பெண்மணி; ஒருமையில் பேசிய பொன்முடி
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
மாணவர்களே உங்களிடம் ஒன்றே ஒன்று தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். நீங்கள் நன்றாக படிக்க வேண்டும். ‘படி படி படி’ என்பதுதான் இப்போதைக்கு உங்களின் எண்ணமாக இருக்க வேண்டும். படிப்பது என்றால் வெறும் பாடப்புத்தகங்களை மட்டும் படிப்பது அல்ல. நாட்டில் என்ன நடக்கிறது என்பது தொடர்பான பொது அறிவையும் நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு நீங்கள் தினமும் செய்தித் தாள்களை படிக்க வேண்டும். ஆசிரியர்களும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை தாண்டி பொது அறிவையும் சொல்லிக் கொடுங்க.
ஏனென்றால் கல்லூரி முடிந்த பிறகு பல அரசாங்க வேலைகளுக்கு போட்டித் தேர்வுகளை நீங்கள் எதிர்கொள்ள வேண்டும். ஐஏஎஸ், டிஎன்பிஎஸ்சி, குரூப் 1, வங்கித் தேர்வு என பல போட்டித் தேர்வுகள் இருக்கின்றன. அதில் நீங்கள் வெற்றி பெற பொது அறிவு மிகவும் அவசியம். ஒருகாலத்தில், ப்ளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தது. ஆனால், இந்த ஒன்றிய அரசு வந்ததில் இருந்து நீட் தேர்வை கொண்டு வந்துட்டாங்க. அதற்கும் அரசாங்கம் பயிற்சி கொடுத்துட்டு இருக்கு.
இந்தப் பள்ளியில் கூட நீட் பயிற்சி பெற்று தேர்வில் வெற்றி பெற்ற 8 மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நீட் தேர்வு வேண்டாம்.. ப்ளஸ் 2 மார்க் அடிப்படையில் எம்பிபிஎஸ்-இல் இடம் கொடுக்கணும்னு நம் முதல்வர் சொல்லிட்டு இருக்காரு. ஆனால், ஒன்றிய அரசு அதற்கு செவிசாய்க்கும் வரை நீங்க நீட் தேர்வுக்கு தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு பொன்முடி பேசினார்.