The Hunt for Veerappan: "என் அப்பா என்ன சைக்கோவா? கடவுள் மாதிரி வாழ்ந்தவரை விலங்கோட..” – வித்யா

வீரப்பன்… வாழ்வு முதல் மரணம்வரை தோண்ட தோண்ட திகிலூட்டும் மர்மங்கள் இருக்கின்றன. வீரப்பன் மறைந்து 19 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் அவர் குறித்த சினிமா, சீரியல், வெப் சீரிஸ், ஆவணப்படம் என இப்போதும் பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறார்.

எப்போது பேசப்பட்டாலும் அவர் குறித்த ரகசியங்களையும் மர்மங்களையும் அறிந்துகொள்ள மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் என்றால் எப்பேர்ப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார்? வீரப்பன் தேடுதல் வேட்டையை மையப்படுத்தி லேட்டஸ்ட்டாக ரிலீஸாகியிருக்கும் ‘தி ஹண்ட் ஃபார் வீரப்பன்’ ஆவணப்பட டீசர் மீண்டும் வீரப்பன் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்க்க ஆரம்பித்திருக்கிறது. ஆக்ஸ்ட் 4-ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக இருக்கும் இந்த ஆவணப்படம் குறித்த எதிர்பார்ப்புகளும் சர்ச்சைகளும் இப்போதே ஆரம்பித்துவிட, பாஜக வின் ஓபிசி பிரிவின் மாநிலப் பொறுப்பில் இருக்கும் வீரப்பனின் மகள் வித்யாராணியிடம் பேசினேன்…

”அப்பாவைப் பற்றிய ‘தி ஹண்ட் ஃபார் வீரப்பன்’ ஆவணப்பட டீசர் பார்த்தீங்களா, எப்படியிருக்கு?”

நல்லாருக்கு. ஆனா, மேக்கிங்கைப் பார்க்கும்போது தரமாக எடுத்துள்ளார்கள் என்பது தெரியவருகிறது. ஆனால், டீசரில் அப்பாவைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள வசனங்கள் சங்கடத்தைக் கொடுத்தது. அப்பாவை ராபின் ஹுட்ன்னு அந்த டீசர்ல சொல்றாங்க. ஆனா, அதோடு கடத்தல்காரர்ன்னு சேர்த்து சொல்றாங்க. தன்னை சுற்றி இருந்த எல்லோருக்கும் அப்பா கடவுளாத்தான் இருந்தார். அதைத்தான் பிரதிபலிக்கிறது அந்த ராபின் ஹுட் என்கிற வார்த்தை. அதேமாதிரி, கடத்தல்காரர், கொள்ளைக்காரர்ன்னு சொல்றாங்க.

அவர் எந்த விதத்திலேயுமே எங்களுடைய எதிர்காலத்துக்கு எதையுமே செஞ்சுட்டு போகல. அப்படி, அவர் சுயநலமா இருந்திருந்தா எங்களுக்குன்னு சொத்து சேர்த்து வெச்சுட்டு போயிருப்பாரே? நானே ஸ்கூல் நடத்தி எனக்கான வாழ்வாதாரத்தைத் தேடிக்கிறேன். அதேமாதிரிதான், அம்மாவும் தங்கச்சியும். உலக அளவில இந்த ஆவணப்படத்தை பார்த்து அப்பாவைப்பற்றி மக்கள் எப்படி வேண்டுமானாலும் கற்பனை செய்துகொள்ளலாம். தூரமாக இருந்து பார்ப்பவர்களுக்கு அப்பாவை தவறாகத்தான் தெரியும். ஓவர் நெகட்டிவிட்டியா சித்தரிக்கப்படும்போது அங்கு நல்லது இருக்குன்னுதானே அர்த்தம்?.”

உலகளவில் நெட்ஃப்ளிக்ஸே அவர் பற்றிய ஆவணப்படத்தை வெளியிடுதுன்னா எந்தளவுக்கு கெப்பாசிட்டியா இருந்திருப்பார்? ஒவ்வொரு தடவையும் அப்பாவை குறித்து பேசும்போதும் படமாக்கும்போது, இந்த உலகத்தில் அப்பாவை விஞ்சிய வீரன் யாருமில்லை என்ற எண்ணம் வருகிறது. ‘அப்பாவை படமாக்கி திரும்பத் திரும்ப உண்மையாக்குகிறார்கள். நேர்மையான விஷயத்திற்கு வீரமா நிற்குறாங்க இல்லையா? அப்படித்தான், எங்கப்பாவை நான் ஃபீல் பன்றேன். அவர் இல்லைன்னாலும், கூடவே இருக்கிற எஃபெக்ட் எங்களுக்கு கிடைச்சிக்கிட்டே இருக்கு. அவர், பண்ணினதெல்லாம் யாரும் பண்ணாத செயல். தனித்தன்மையான ஐடியல் என்கிறார்கள். அந்த வார்த்தையில் மட்டும் உண்மை இருக்குன்னு நம்புறேன்.

மற்றபடி, அப்பாவை, உலகளவில் ஒரு மோசமான கிரிமினலாக காட்டுவதுபோல் டீசர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கதையை உலகம் எப்படி எடுத்துக்கப்போகுதுங்குற எதிர்பார்ப்பு எனக்குள்ள இருக்கு. ஆவணப்படத்தை முழுமையாக பார்த்தபிறகுதான் ஒரு முடிவுக்கு வரமுடியும். இரண்டு மாநில மக்களை பிணைய கைதிகளாக்கி அப்பா பணம் வாங்குனார்ன்னு டீசர்ல காட்டப்படுது. ’மனித உருவில் இருக்கும் காட்டு விலங்கு’ன்னு சொல்றாங்க. ஆன் தி ஸ்பாட்டுல அட்டாக் பண்ணும் விலங்குகளோடு ஒப்பிடுறாங்க. எங்கப்பா என்ன சைக்கோவா? எவ்ளோ கடவுள் தன்மையான மனுஷன்? மக்களோட கஷ்டங்களை புரிஞ்சு வாழ்ந்த மனுஷனை விலங்கோடு ஒப்பிடுவது எப்படி சரியாகும்? அது எனக்கு வருத்தத்தை கொடுத்திருக்கு.”

வித்யாராணி வீரப்பன்

”உங்கள் அப்பா குறித்த திரைப்படங்கள், வெப்சீரிஸ்களுக்கு உங்கள் அம்மா வழக்கமாக எதிர்ப்பு தெரிவிப்பார். ஆனா, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே ஏன்?

”நெட்ஃப்ளிக்ஸ், அம்மாவை அணுகும்போது அப்பா, காவல்துறை என இரண்டு தரப்பிலும் உள்ள நியாயத்தைதான் காட்டப்போகிறோம் என்றார்கள். அம்மா எந்தளவுக்கு காவல்துறையின் சித்ரவதைக்கு உள்ளானார் என்பதையெல்லாம் கேட்டார்கள். அம்மா சந்தித்த சவால்களையும் சித்ரவதைகளையும் சொல்வதற்கு இந்த ஆவணப்படத்தை ஒரு வாய்ப்பாகத்தான் பார்க்கிறார். ஆனால், ஆவணப்படத்தை முழுமையாகப் பார்த்தால்தான், எப்படி எடுத்துள்ளார்கள் என்பது தெரியும். அப்பாவை எதிர்த்து அரசு தரப்பில் இத்தனைப் பேர் இருக்கும்போது, அவரது பக்க நியாயத்தையையும் உண்மையையும் சொல்ல யார் இருக்கிறார்கள்? நாங்கள் எடுத்துச் சொல்லவேண்டுமல்லவா? அதனால்தான், அம்மா பேசினார்.”

”ஆனால், டீசரின் தொடக்கத்திலேயே உங்கள் அப்பா வீரப்பன் செய்த கொலைகள் குறித்து பேசப்படுகிறதே?”

”காவல்துறையில் நேர்மையானவர்களும் இருந்திருக்காங்க. அநியாயம் செய்பவர்களும் இருந்திருக்காங்க. அப்பா பக்கம் இருந்தவர்கள் சாதாரண அப்பாவி மக்கள். நம்பள அடிச்சிக்கிட்டே இருந்தா ஒரு கட்டத்துல திருப்பி அடிக்குற குணம் வந்துடும். மக்கள் மேல நிறைய பொய் வழக்குகள் போடப்பட்டிருக்கு. அதுமாதிரி, அப்பா மேலேயும் நிறைய பொய் வழக்கு போடப்பட்டிருக்கும். இத்தனை பேரை கொலை பண்ணிட்டாருன்னு சொல்றாங்க. அவர்கள் என்ன தவறு செய்தார்கள் என்பதையும் பார்க்கவேண்டுமல்லவா? அநியாயமா அடிக்கும்போது என்ன செய்யமுடியுமோ அதை அவர்களுடைய பாணியில் செய்திருக்காங்க. இதை, முழுமையா ஒருத்தர் பக்கம் மட்டுமே நியாமமா இல்லாம, எங்கப்பா பக்கம் இருக்கும் நியாயத்தையும் சமமாக காண்பிப்பாங்கன்னு நம்புறோம். அப்பா சட்டத்துக்கு புறம்பா செயல்பட்டார்ன்னு கண்மூடித்தனமா சொல்லிடமுடியாது. ஆரம்பக்கட்டத்துல அப்பா ஒரு பிசினஸ்ஸாக இதை செய்யல. ஒரு தொழிலாளியாகத்தான் இதை செய்துள்ளார். அப்படியென்றால், இதை செய்த பிசினஸ் மேன் யார்? அதைப்பற்றி ஏன் பேசத் தயங்குறாங்க? யாரை காப்பாற்ற நினைக்குறாங்க? இதுக்கு பலிகெடா எங்கப்பாதானா? இதுக்கு நியாயமே கிடைக்காதாங்குற கேள்வி என் ஆழ்மனசுல இருந்துக்கிட்டே இருக்கு.”

”அப்பாவைப்பற்றிய படங்கள், சீரியல்கள், வெப்சீரிஸ்கள் நிறைய வந்துக்கிட்டே இருக்கு. இதில், அப்பாவைப்பற்றி எதில் சரியாக பதிவு செய்திருப்பதாக நினைக்கிறீங்க?”

”இதுவரைக்கும் அப்பாவைப்பற்றி யாருமே முழுமையாக , சரியாக பதிவு செய்யலைங்குறதுதான் எங்க குடும்பத்தினரோட கருத்து. இதுவரைக்கும் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா எடுத்திருக்காங்க. உண்மையான சம்பவங்களை யாரும் சரியா பதிவு செய்யல. பிசினஸ் நோக்கமில்லாம, ஒளிவுமறைவு இல்லாம உண்மைத்தன்மையோடு அப்பாவை கொண்டு செல்லவேண்டும் என்று நினைக்கிற இயக்குநர்களால்தான் இதை செய்யமுடியும். இதுவரை, அப்பாவை குறித்து வந்தது எல்லாமே கற்பனை கதைதான். அதேநேரத்தில், மக்கள் தொலைக்காட்சியில் வெளியான ’சந்தனக்காடு’ சீரியல் மக்கள் பக்கம் நின்று எடுக்கப்பட்டது. எங்க தரப்பு நியாயத்தையும் காட்டியிருக்காங்க. அதேநேரத்துல, போலீஸ் தரப்புல இருக்கிற நியாயத்தையும் காண்பிச்சிருக்காங்க. ’சந்தனக்காடு’ ஒவ்வொரு எபிசோடையும் பார்க்கும்போதும் கண் கலங்காம இருந்ததில்ல, அழுதுடுவேன்.”

”உங்கள் தங்கை சினிமாவுல நடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. உங்களுக்கும் வாய்ப்புகள் வந்தா நடிப்பீங்களா?”

”எனக்கும் நிறைய வாய்ப்புகள் வந்தது. ஆனா, எனக்கு விருப்பமில்ல. எங்கப்பாவுக்கு நடிக்கணும்ங்குற விருப்பம் இருந்திருக்கு. அந்த இன்ட்ரஸ்ட்தான் என் தங்கச்சிக்கும் வந்துடுச்சு. அதேநேரம் அப்பா மக்கள்நலன் சார்ந்து இருந்தார். அந்த ஆர்வம் எனக்கு வந்துடுச்சு.”

”அப்பாவுடைய நினைவுநாள் வரப்போகுது, என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?”

”தமிழக அரசிடம் அப்பாவுக்கு கோயில் கட்டச்சொல்லி கோரிக்கை வைக்கலாம்னு இருக்கோம். அப்பாவுடைய நினைவிடம் ஒரு மண் திட்டு மாதிரிதான் இருக்கு. இப்பவும் அப்பாவோட நினைவு நாளில் மக்கள் கும்பிட்டு போறாங்க. அரசு அதற்கெல்லாம் நிறையக் கட்டுப்பாடு விதிக்குது. ஒண்ணு அரசே கோயில் கட்டணும். இல்லைன்னா, எங்களுக்கு கோயில் கட்ட அனுமதி கொடுக்கணும்.”

“மணிப்பூர் பாலியல் கொடூரத்தை எப்படி பார்க்குறீங்க?”

வித்யாராணி வீரப்பன்

“ரொம்ப அவமானகரமான சூழல் நிலவுது. இந்த பிரச்சனையை இந்தளவுக்கு வளரவிட்டிருக்கக் கூடாது. மணிப்பூரில் பா.ஜ.கதான் ஆள்கிறது. இந்நேரம், மக்களை கூப்பிட்டு சமாதானம் பேசி சரி செய்திருக்கவேண்டும். மக்களுக்காத்தானே அரசு?”.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.