“ஒவ்வொருவரையும் சென்றடைய வேண்டும், யாரையும் விட்டுவிட வேண்டாம்” – Reach every victim of trafficking, leave no one behind
மனித குல வரலாற்றில் மனிதக் கடத்தல் எனப்படுவது பல்லாண்டுகளாக வழக்கத்தில் இருக்கிறது. வரலாற்றில் பெரும் பகுதியில் அடிமைத் தொழில் என்பது அதிகாரப்பூர்வமாகவும் பரந்துபட்டும் இருந்திருக்கிறது.
இது பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட மனிதக் கூட்டம் மற்றொரு மனிதக் கூட்டத்தின் மீது நிகழ்த்தும் வன்முறையாக இருந்தது. அடிமைத்தனம் அங்கீகரிக்கப்படாத நிலையில் மனித கடத்தல் இன்னமும் நிகழ்ந்து கொண்டு இருப்பது அதிர்ச்சியளிக்கக்கூடிய உண்மை. உலக வரலாற்றை சிறிது பின்னோக்கி பார்த்தால் 16 வது நூற்றாண்டு முதலே ஆப்பிரிக்க மக்கள் கொத்தடிமைகளாக போர்ச்சுகலுக்கு கொண்டு செல்லப்பட்ட கதைகள் மனதை திகைக்க வைக்கின்றன. மேலும் ஆப்பிரிக்கர்களை அடிமைகளாக வைப்பது அமெரிக்காவில் ஒரு சட்டபூர்வ நிகழ்வாகவே இருந்து வந்திருக்கிறது.
1807 ஆம் ஆண்டில் பிரிட்டன் அரசு அடிமைத்தனத்தை சட்ட மீறல் என்று கொண்டுவர அதனைத் தொடர்ந்து 1820-ல் அமெரிக்க அரசும் இதனை வழிமொழிகிறது. இம்மாதிரி சட்டங்கள் இயற்றப்பட்ட பின்பும் 1850 முதல் 1900 வரை இருந்த இடைப்பட்ட காலத்தில் சீனப் பெண்களை அமெரிக்காவிற்கு பாலியல் தொழில் அடிமைகளாகவும் கூலி தொழிலாளிகளாகவும் இறக்குமதி செய்யும் பழக்கம் இருந்து வந்திருக்கிறது.
மக்களை மக்களே அடிமைப்படுத்தும் இம்முறை ஒழிய, 1921 யில் முதலாம் உலகப் போரின் காலத்தில் லீக் ஆப் நேஷன்ஸ் என்ற அமைப்பு 33 நாடுகளின் ஒப்பந்தத்துடன் மனித கடத்தலுக்கு எதிராக கையெழுத்து ஒப்பந்தம் இயற்ற, 2000 ஆண்டு ஐக்கிய நாடுகள் கூட்டம் இணைந்து மனித கடத்தலில் ஈடுபடுபவர்களை கடும் தண்டனைக்கு உண்டாக்க வேண்டும் என்றும் குறிப்பாக பெண்களையும் குழந்தைகளையும் கடத்துபவர்களுக்கு சிறப்பு தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் சட்டம் இயற்றுகிறது. 2007 ஆம் ஆண்டு போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் (UNODC)
மனிதக் கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கான வகுப்புவாத உலகளாவிய அணுகுமுறை என்ற ஒரு இயக்கத்தைச் செயல்படுத்தி அதில் 116 நாடுகள் ஒப்பந்தம் இட்டு ஆமோதிக்கச் செய்கிறது. சர்வதேச நிறுவனங்கள் இவ்வாறு மனிதக் கடத்தளுக்கு எதிராக செயல்படத் தொடங்க, ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் போன்ற மனித உரிமை அமைப்புகள் இந்த கொடுந்தீ வன்முறை செயல்களுக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்குகின்றன.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் கொத்தடிமை தொழிலாளர்கள் முறை பல்வேறு வடிவம் பெற்று மிகவும் பரவலாக நிகழும் சூழலில் பாலியல் விடுதிகள், செங்கல் சூலைகள், விவசாய நிலங்கள், ஆலைகள், சுரங்கங்கள் மற்றும் தொழிற்சாலைகள் எனப் பலதரப்பட்ட இடங்களில் மக்கள் அடிமைகளாகக் கடத்தப்படுகின்றனர். இம்முறை என்பது குடும்பக்கடனை பூர்த்தி செய்வதற்காகவும் உறவினர் வாங்கிய கடனை அடைப்பதற்காகவும் தொடர்ந்து அடிமைச்சங்கிலிக்குள் மாட்டிக்கொண்டு மக்கள் வாழ்வதாக அமைகிறது.
உலகளவு, இந்தியளவு, தமிழக அளவு என்று ஒவ்வொரு நிலையில் பார்த்தாலும் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு குடும்பம் இம்மாதிரி ஒரு அடிமை வாழ்வில் சிக்கி இருக்க நேர்ந்திருக்கும் என்பதுதான் உண்மை. அந்த வகையில் தனது குழந்தை பருவத்தின் பெரும் பங்கை ஒரு கொத்தடிமை தொழிலாளியாகவே கழித்திருக்கும் ஜெகதீசனிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது.
திருவள்ளூர் மாவட்டம் செவ்வாபேட்டை அடுத்த கிளாம்பாக்கம் என்னும் ஊரில் ஒரு ரைஸ் மில்லின் உம்மி அடுக்குகளிற்கிடையே மூன்று தலைமுறைகளாக கொத்தடிமை தொழிலில் ஈடுபட்டிருக்கும் குடும்பம் தான் இவருடையது. விவரம் தெரிய ஆரம்பித்த வயது முதலே அடிமை வாழ்விற்குள் சிக்கிக்கொண்ட இவர் தனது தாத்தா மற்றும் அப்பாவின் வாழ்வில் பெரும் பங்காகி தானும் அடிமைப்பட்டு வாழ்ந்திருக்கிறார். பள்ளி நாட்களில் கூட இரவு 12 மணிக்கு அடுப்பைப் பற்ற வைக்க தாத்தா எழுப்பும்போது எந்த ஒரு நிராகரிப்பும் இன்றி அதை செய்து தான் ஆக வேண்டும், அப்படி செய்யாவிடில் அடுத்த நாளிற்கான பிழைப்பு ஓடாது என்று அன்று இருந்த நிலையை, பேசும் போதே கண்முன் கொண்டு வருகிறார்.
“இம்மாதிரி அடிமைத்தனத்தில் நானும் ஈடுபட்டு இருக்க அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாது போன காரணத்தால் அம்மா 3,000 ரூபாய் கடன் வாங்க அது 10,000 வரை வட்டி சேர்ந்து குட்டி போட்டது. பின் அதை அடைக்க வேண்டி இன்னமும் தொழில் சுமை முதுகில் ஏறியது தான் மிச்சம். அந்த மில்லில் எங்கள் குடும்பமும் எங்கள் மாமனின் குடும்பமும் மட்டும் தான் சிக்கி இருந்தோம். திடீரென்று ஒரு நாள் நான் பள்ளி விட்டு வரும்போது ஒரு லாரியில் என் பெற்றோர்களும் தாத்தா பாட்டியும் போவதைக் கண்டேன், வழியில் என்னைப் பார்த்ததால் அப்படியே என்னையும் ஏற்றிக் கொண்டு ஒரு இடத்திற்குக் கொண்டு போனார்கள். அப்போதுதான் தெரிந்தது எங்கள் வாழ்வில் விடியல் வந்ததென்று. 2006 ஆம் ஆண்டு அரசோடு இணைந்து ஒரு தொண்டு நிறுவனத்தின் செயல்பாட்டால் நாங்கள் விடுவிக்கப்பட்டோம். பின் திருத்தணி அருகில் உள்ள மத்தூர் என்ற கிராமத்திற்கு நாங்கள் கொண்டு செல்லப்பட்டோம். அங்கிருந்து பத்தாம் வகுப்பு வரை படித்தேன். இப்பொழுது திருமணம் ஆகி எனக்கு மூன்று பிள்ளைகள் பத்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு, நான்காம் வகுப்பு என படிப்பில் சிரத்தியாக இருக்கிறார்கள்.”
தற்கால பிழைப்பு என்னவாக இருக்கிறது என்று கேட்டபோது, திருவள்ளுவர் மாவட்ட ஆட்சியர் ஜான் அல்பிஸின் சிறகுகள் சூலை தொழிலில் பணியெடுத்து இப்போது சீராக போய்க் கொண்டிருக்கிறேன் என்கிறார். எங்களுக்கு இதைத் தவிர வேறு வேலை தெரியாத பட்சத்தில் இதையே தொழிலாக்கி தரும் முனைப்புடன் செயல்பட்ட அரசாங்கத்தின் இந்த முயற்சி மிகவும் வரவேற்கத்தக்கது.
வேறு எந்த வேலையும் செய்வது சிரமம் என்ற நிலை எனக்கு வந்தது போல என் பிள்ளைகளுக்கு ஆகிவிடக்கூடாது என்றபோது உங்கள் பிள்ளைகள் என்ன வேலை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்க “பையன் படிச்சு சோசியல் ஒர்க்குன்னு (social work) சொல்லுவாங்க பாத்திங்களா அது மாதிரி சேர்ந்து நாலு பேருக்கு உதவி பண்ணனும், இந்த மாதிரி மக்களுக்கு என்ன குறையோ அதெல்லாம் கண்டுபிடிச்சு என் பசங்க ஹெல்ப் பண்ணனும், ஏன்னா எத்தனையோ பேர் இருக்காங்க இந்த மாதிரி அவங்க எல்லாரும் வெளிய வரணும்” என்று தனது தூய எண்ணத்தை வார்த்தைகளின் வழி வெளிக்கொண்டு வருகிறார் ஜெகதீசன்.
Rescued bonded laborers association (RBLA) எனப்படும் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்கள் நல்வாழ்வு சங்கத்தில் இப்போது திருவள்ளூர் மாவட்ட தலைவராக திகழ்ந்து வருகிறார் ஜெகதீசன்.
இதுபோல இருப்பவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற ஜெகதீசனின் சிந்தனை தான் இந்த ஆண்டு மனித கடத்தல் விழிப்புணர்வு தினத்தின் கருப்பொருளாகவும் எடுத்து இருக்கிறது சர்வதேச நாடுகள்.