'சிறுகதைகள் படித்தால் நன்றாக திரைக்கதை எழுதலாம்' – இயக்குனர் மிஷ்கின்

''ஒரு சிறுகதையை படித்து சரியாக புரிந்து கொண்டால், சினிமாவுக்கான திரைக்கதை சிறப்பாக எழுதலாம் என்பதற்கு நானே உதாரணம்,'' என்கிறார் இயக்குனர் மிஷ்கின்.

சமீபத்தில் கோவை புத்தக கண்காட்சியில் நடந்த நுால் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குனர் மிஷ்கின், சிறுகதைகள் குறித்து ஆழ்ந்த இலக்கிய ரசனையுடன் பேசி, வாசகர்களின் கைதட்டல்களை பெற்றார். அவர் பேசியதாவது:

கதை எழுதுவது கடினமான விஷயம். நான் 11 திரைக்கதைகள் எழுதி இருக்கிறேன். திரைக்கதையை பொறுத்தவரை 10 நிமிடங்களுக்குள் ஏதாவது திருப்பங்கள் வந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் படம் பார்ப்பவர்கள் ரசிப்பார்கள். இல்லை என்றால் படம் போரடிக்கிறது என்று எழுந்து போய்விடுவார்கள்.

சிறுகதை அப்படியில்லை, நாவல், நாடகங்களை விட கஷ்டமான வடிவம். நிறைய சிறுகதைகளை படித்தால்தான் சிறுகதை எழுத முடியும். அதேபோல் சினிமா எடுப்பதை விட குறும்படம் எடுப்பது கஷ்டம். ஒரு சிறுகதையை படித்து சரியாக புரிந்து கொண்டால், சினிமாவுக்கு திரைக்கதை நன்றாக எழுதலாம் என்பதற்கு நானே உதாரணம்.

நாவல் படிக்க எனக்கு நேரமில்லை. அதனால் டால்ஸ்டாய், ஆண்டன் செக்காவ் அல்லது ஏதாவது ஒரு ஐரோப்பிய சிறுகதையை படித்து கொண்டே இருப்பேன். சிறுகதை என் வாழ்க்கையை புரட்டி போடுகிறது. என் சிந்தனையை மாற்றுகிறது. கதை, கவிதை, ஓவியம் ஆகிய கலை வடிவங்கள் ஏன் படைக்கப்படுகின்றன என்றால், அது ஏதோ ஒரு வகையில் வாழ்க்கையின் அர்த்தத்தை வெளிப்படுத்துகிறது.

பலர் வாழ்நாள் முழுவதும் ஒரு புத்தகத்தை கூட படிக்காமல் இறந்து விடுகின்றனர். அது அர்த்தமற்ற வாழ்க்கையாகும். ஒரு நல்ல சிறுகதை மலர்களின் நறுமணத்தை அதிகப்படுத்துகிறது. ஒரு மரத்தை தொட்டுப்பார்த்து நன்றி சொல்ல வைக்கிறது. இலக்கிய வாசகனை சிறுகதைகள் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு அழைத்து செல்கிறது.

இவ்வாறு மிஷ்கின் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.