மதுரை பொன்விழா எழுச்சி மாநாடு… இந்த ஒற்றை விஷயம் தான் அதிமுக ரத்தத்தின் ரத்தங்கள் மத்தியில் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.
அதிமுகவின் பொதுச் செயலாளராக அங்கீகரிக்கப்பட்ட பின்னர் நடக்கும் முதல் மாநில மாநாடு. எனவே வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி தென் தமிழகம் களைகட்ட வேண்டும். ஒட்டுமொத்த தமிழக மக்களும் ஆச்சரியத்தில் வாய் பிளக்க வேண்டும். ஏன் கூட்டணி கட்சியான பாஜகவையே திணறடிக்க வேண்டும்.
விருதுநகர் அதிமுக கூட்டம்
அப்படி ஒரு சம்பவமாக மாநாடு இருக்க வேண்டும் என்று வரிந்து கொண்டு வேலை செய்து வருகின்றனர். தற்போது ஒவ்வொரு மாவட்டமாக கட்சியினரை திரட்டி மாநாட்டிற்கு எப்படி தயாராவது என பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதில் லேட்டஸ்ட் வரவு விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி நகரம். இங்குள்ள தனியார் மண்டபத்தில் பெரிய கூட்டத்திற்கு நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு
அதில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இந்த கூட்டத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி,
, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட பலரும் தலைமை தாங்கினர். இதில் பேசிய கே.பி.முனுசாமி, அதிமுக தொண்டர்கள் பலத்தால் மிகப் பெரியதாக காணப்படுகிறது. மக்களவை தேர்தல் நெருங்கி விட்டது.
கே.பி.முனுசாமி அட்டாக்
கூடவே திமுகவிற்கு பயமும் வந்துவிட்டது. அதனால் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதற்றத்தில் ஏதேதோ அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இனி அதிமுகவின் விஸ்வரூபத்தை யாராலும் தடுக்க முடியாது. வரும் ஆகஸ்ட் 20ல் மதுரையில் நடக்கப் போவது திருப்புமுனை மாநாடு. நமது கழக வரலாற்றில் புதிய மைல்கல்லாக இருக்கும். ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியின் செல்வாக்கு குறைந்து வருகிறது.
எடப்பாடியின் தென் மண்டல வியூகம்
ஏனெனில் மக்கள் சிந்திக்க தொடங்கிவிட்டனர். இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப தயாராகி கொண்டிருக்கின்றனர். எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி மலரும். அதற்கு கழகத்தினர் முழு மூச்சில் செயல்பட வேண்டும் என்று கே.பி.முனுசாமி கேட்டுக் கொண்டார். தென் மாவட்டங்களில் தங்கள் கட்சியின் செல்வாக்கை வலுப்படுத்த எடப்பாடி வியூகம் வகுத்துள்ளார்.
மதுரை எழுச்சி மாநாடு
அதற்கு மதுரை பொன்விழா எழுச்சி மாநாடு பெரிதும் கைகொடுக்கும் என கணக்கு போட்டு வைத்துள்ளனர். இதுவரை இல்லாத அளவிற்கு பெரிய தொகையை செலவிட்டு கவனம் ஈர்க்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக கட்சியின் சீனியர்களிடம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஸ்வீட் பாக்ஸ் ஒதுக்க கட்சி தலைமை கேட்டு கொண்டதாக ஒரு செய்தி பரவி வருகிறது. இதனால் பலரும் அதிருப்தி மோடிற்கு சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
ர.ர.,க்கள் எதிர்பார்ப்பு
இதுபற்றி தகவலறிந்து எடப்பாடி பழனிசாமி தானே களமிறங்கி விஷயத்தை கவனித்து கொள்ள திட்டமிட்டிருப்பதாக பேச்சு அடிபடுகிறது. எது எப்படியோ, மதுரை மாநாடு அதிமுகவிற்கு தென் தமிழகத்தில் எழுச்சியை கொடுத்து, பிளவுற்று கிடக்கும் வாக்குகளை ஒன்றுபடுத்தினால் சரி என்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.