சில மாதங்களாக, வெயிலில் வெந்து கிடந்த சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. பசுமையான சூழ்நிலை தென்படுவதால் சுற்றுலா பயணியர் படையெடுக்கின்றனர். ஹிமவத் கோபாலசுவாமி மலையின் இயற்கை சூழலை ரசித்தபடி கோபாலசுவாமியை தரிசனம் செய்கின்றனர்.
சாம்ராஜ் நகர் குண்டுலுபேட் பண்டிப்பூர் பூங்காவின், பசுமையான வனப்பகுதிக்கு நடுவில், கோபாலசுவாமி மலை அமைந்துள்ளது. உடலை வருடி செல்லும், குளிர்க்காற்றை அனுபவிக்கவே தினமும் ஏராளமானோர் வருகின்றனர்.
தற்போது குளிர்க்காற்று மட்டுமின்றி, பனிப்பொழிவும் உள்ளது. எப்போதும் அதிகாலை, மாலையில் பனியால் சூழப்படுவது இம்மலையின் சிறப்பாகும்.
கோவர்த்தன மலை
முன்னொரு காலத்தில் இந்த மலை கோவர்த்தன மலை என, அழைக்கப்பட்டதாம். ஏனென்றால் தொலைவில் இருந்து பார்த்தால், பசு போன்று காணப்படுகிறது. பசுமை நிறைந்த மலைக்கு, கோபாலர்கள் எனப்படும் யாதவர்கள் மாடு மேய்க்க வந்தனர். எனவே கோவர்த்தன மலை, கோபாலசுவாமி மலையானதாம்.
கோபாலசுவாமி மலை, தரையில் இருந்து 1,450 அடி உயரத்தில் உள்ளது. இதன் உச்சியில் அழகான கோவிலும் உள்ளது. இங்கு கோபாலசுவாமி குடி கொண்டுள்ளார். ஹிமா என்றால் பனியாகும். ஹிமா, கோபாலசுவாமி இணைந்து, ‘ஹிமவத் கோபாலசுவாமி மலை’ என பெயர் வந்தது. இதனை திரயம்பகாத்ரி, நீலாத்ரி, மங்களாத்ரி, சங்கராத்தி, ஹம்சாத்ரி, கருடாத்ரி, பல்லவாத்ரி, மல்லிகார்ஜுனகிரி மலைகள் சூழ்ந்துள்ளன.
ஹம்சதீர்த்தம், பத்ம தீர்த்தம், ஷங்க தீர்த்தம், சக்கர தீர்த்தம், கதா தீர்த்தம், வன மூலிகா தீர்த்தம், ஷக்ஞா தீர்த்தம், தொட்டிலு தீர்த்தம் என்ற புண்ணிய தீர்த்த குளங்கள் உள்ளன. குழந்தை இல்லாத தம்பதி, தொட்டிலு குளத்தில் நீராடினால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சந்தான கோபால கிருஷ்ணர்
கோபாலசுவாமி கோவிலுக்கு 700 ஆண்டுகளுக்கும் அதிகமான வரலாறு உள்ளது. ஹொய்சளா மன்னர் சோழ பல்லாளா என்பவர், இந்த கோவிலை கட்டியதாக, வரலாற்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.
அதன்பின் வந்த நாட்களில், மைசூரின் உடையார் ஆட்சியில் கோவில் மேம்படுத்தப்பட்டது. இங்கு ருக்மிணி, சத்யபாமா சமேதராக காட்சி தரும் ஸ்ரீ கிருஷ்ணரை, சந்தான கோபால கிருஷ்ணர் என்றும் அழைக்கின்றனர்.
கோபாலசுவாமி மலை தன்னுடையதேயான மகத்துவம், சம்பிரதாயம் கொண்டுள்ளது. இந்த பகுதியை வனத்துறை ‘வனவிலங்கு மண்டலம்’ என அறிவித்துள்ளது.
இந்தியாவில் மிக அதிகமான புலிகள் வசிக்கும் இடங்களில் இம்மலையும் ஒன்றாகும். வெளி மாவட்ட, மாநில, நாடுகளில் இருந்தும், சுற்றுலா பயணியர் வருகின்றனர். அவரவர் மொழிகளில் பேசும் திறன் கொண்ட அர்ச்சகர் இங்கிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஹிமவத் கோபாலசுவாமி மலை, பெங்களூரில் இருந்து 220 கி.மீ., மைசூரில் இருந்து 74 கி.மீ., துாரத்தில் உள்ளது. குண்டுலுபேட்டில் இருந்து, 20 கி.மீ., துாரம் ஊட்டி பாதையில் சென்றால், ஹங்களா என்ற கிராமம் வரும். இங்கிருந்து வலது புறமாக சென்றால், கோபாலசுவாமி மலையை அடையலாம். தனியார் வாகனங்களுக்கு மலையில் நுழைய அனுமதி இல்லை. சுற்றுலா பயணியருக்கு அரசு பஸ்கள் வசதி உள்ளது.
தின்பண்டங்கள்
மலைக்கு செல்லும் முன், ஹங்களா கிராமத்தில், தங்களுக்கு தேவையான தின்பண்டங்களை வாங்கி செல்ல வேண்டும். மலையில் தின்பண்டங்கள் கிடைக்காது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குப்பையை கண்ட இடங்களில் வீசியெறிய கூடாது. காலை 8:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை மட்டுமே, மலைக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது. கோபால சுவாமி மலை அடிவாரத்தின், நுழை வாசலில் இருந்து உச்சியில் உள்ள கோவிலுக்கு, வளைவு, நெளிவு, கரடு, முரடான சாலையில் பயணிப்பது புதிய அனுபவமாக இருக்கும்.
இப்படி செல்லும் போது, நடு நடுவே காட்டுயானை, மான்கள் தென்படும். சில நேரத்தில் தொலைவில் சிறுத்தை, புலி, கரடியும் போன்ற விலங்குகளையும் பார்க்கலாம்.
சில ஆண்டுகளுக்கு முன், காட்டு யானை ஒன்று தினமும் கோவிலுக்கு வந்து, வணங்கி சென்ற அதிசய சம்பவமும் நடந்துள்ளது.
– நமது நிருபர் –
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்