உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பான உச்சிமாநாடு – சவுதி அரேபியா ஏற்பாடு

துபாய்,

உக்ரைன்-ரஷியா இடையே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் 17 மாதங்களை தாண்டியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த இரு நாடுகளும் கோதுமை, பார்லி போன்ற உணவு தானியங்களின் ஏற்றுமதி மையமாக உள்ளன.

ஆனால் இந்த போர் காரணமாக ஏற்றுமதி பாதிக்கப்பட்டதால் இவற்றின் விலை தாறுமாறாக உயர்ந்தது. இது உலக பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே போரை நிறுத்த இரு நாடு களும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்படி பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

உச்சிமாநாடு

இந்தநிலையில் ரஷியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக உச்சி மாநாடு ஒன்றை அடுத்த மாதம் (ஆகஸ்டு) நடத்த உக்ரைன் முடிவு செய்தது. இதற்காக கடந்த மே மாதம் நடைபெற்ற அரபு லீக் மாநாட்டில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டார்.

அப்போது போர் தொடங்கியது முதல் அரபு நாடுகள் நடுநிலை வகித்து வருகின்றன. எனவே இந்த போரை நிறுத்த பேச்சுவார்த்தைக்கு வழிவகை செய்ய உதவும்படி அவர் கேட்டுக்கொண்டார். அதன்படி இதற்கான ஏற்பாடுகளை சவுதி அரேபியா அரசாங்கம் செய்து வருகிறது.

30 நாடுகளின் தலைவர்கள்

இந்த மாநாடு செங்கடல் அருகே உள்ள துறைமுக நகரமான ஜெட்டாவில் நடைபெற உள்ளது. இதில் உக்ரைன், பிரேசில், இந்தியா உள்பட சுமார் 30 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் அமெரிக்கா சார்பில் ஜனாதிபதி ஜோ பைடனின் உயர் மட்ட அதிகாரி ஒருவரும் கலந்து கொள்ள உள்ளார்.

அதேசமயம் இந்த மாநாட்டில் ரஷியா பங்கேற்குமா என்பது உறுதி செய்யப்படவில்லை. மேலும் இதற்கான தேதி உள்ளிட்ட மற்ற விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனினும் இந்த மாநாடு போரை நிறுத்த உதவுமா? என உலக நாடுகள் எதிர்நோக்கி உள்ளன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.