சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் கமிட்டாகியுள்ளார் நடிகர் விஜய்.
இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்..
21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் இணையும் ஜெய்: நடிகர் விஜய் -லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் லியோ. மாஸ்டர் படத்தை தொடர்ந்து இந்த மாஸ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். விஜய்யின் பிறந்தநாளையொட்டி கடந்த மாதத்தில் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியான நிலையில், நேற்றைய தினம் சஞ்சய் தத் பிறந்தநாளையொட்டி மிரட்டலான வீடியோ வெளியானது.
ஆண்டனி தாஸ் என்ற சஞ்சய் தத்தின் கேரக்டரை வெளிப்படுத்தும் வகையில் இந்த வீடியோ அமைந்திருந்தது. மிரட்டலான லுக்கில் சஞ்சய் தத் இந்த வீடியோவில் காணப்பட்டார். திடீர் சர்ப்பிரைசாக வெளியான இந்த வீடியோ, விஜய் ரசிகர்களை வியப்பிற்குள்ளாக்கியுள்ளது. அடுத்த மாதம் 15ம் தேதி படத்தில் நடித்துள்ள அர்ஜூனின் பிறந்தநாள் வரும் நிலையில், அப்போதும் இதேபோல வீடியோ வெளியாகும் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் இணையவுள்ளார் நடிகர் விஜய். லியோ படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு தற்போது வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் விஜய். தொடர்ந்து லியோ படத்தின் ஆடியோ வெளியீடு செப்டம்பர் மாதத்தில் நடக்கவுள்ளது. முன்னதாக படத்தின் டீசர், ட்ரெயிலர் போன்றவை குறித்த அப்டேட்களும் எதிர்பார்க்கப்படுகின்றன.
இந்நிலையில் தளபதி 68 படத்தின் சூட்டிங் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக இந்தப் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கு இசையமைக்கவுள்ளார் யுவன் சங்கர் ராஜா. அடுத்த மாதத்தில் தன்னுடைய இசை கோர்ப்பு பணிகளை யுவன் இந்தப் படத்திற்காக துவங்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படத்தின் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனிடையே இந்தப் படத்தில் விஜய்க்கு தம்பியாக நடிகர் ஜெய் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக விஜய்யின் பகவதி படத்தில் ஜெய் இணைந்து நடித்திருந்தார். இந்நிலையில் 21 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் இவர்கள் இருவரும் அண்ணன் -தம்பியாகவே நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக ஆக்ஷன் ஜானரில் இந்தப் படம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்றைய தினம் வெங்கட் பிரபு அடுத்தது என்ன என ஒரு ட்வீட் செய்திருந்தார். இதையடுத்து தளபதி 68 படம் குறித்த அறிவிப்பைதான் அவர் மேற்கொள்ளவுள்ளதாக விஜய் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால் அவர் தன்னுடைய தயாரிப்பில் வெளியாகவுள்ள ஒரு படம் குறித்து அறிவித்திருந்தார். இதனால் விஜய் ரசிகர்கள் கடுப்பான நிலையில், அடுத்ததாக தளபதி 68 படத்தின் அறிவிப்பு தெறிக்கும் என்றும் காத்திருங்கள் என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார்.