ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: தென்கொரியா, ஜப்பான் அணிகள் சென்னையில் தீவிர பயிற்சி

சென்னை,

சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி

ஆக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வருகிற 3-ந் தேதி முதல் 12-ந் தேதி நடக்கிறது.

இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மலேசியா, சீனா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெறும் இந்த சர்வதேச ஆக்கி போட்டிக்காக எழும்பூர் ஸ்டேடியம் நவீன வசதிகளுடன் சர்வதேச தரத்தில் புதுப்பொலிவு பெற்றுள்ளது. போட்டிக்கான இறுதி கட்ட ஆயத்த பணிகளை போட்டி அமைப்பாளர்கள் தடபுடலாக செய்து வருகின்றனர்.

மெகா திரையில் ஒளிபரப்பு

இந்த போட்டியை தமிழகத்தின் எல்லா பகுதியிலும் உள்ள ரசிகர்களும் கண்டுகளிக்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.) நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட ஒரு இடத்தில் போட்டியின் நேரடி ஒளிபரப்பை மெகா திரையில் பார்த்து ரசிக்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

போட்டிக்கான ஏற்பாடுகள் ஒருபுறம் வேகமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகள் தங்களை தயார்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பங்கேற்க முதல் அணியாக மலேசியா கடந்த சனிக்கிழமை சென்னை வந்தது. இதைத்தொடர்ந்து தென்கொரியா, ஜப்பான் அணிகள் நேற்று முன்தினம் இரவு வந்தடைந்தன. விமான நிலையத்தில் இரு அணியினருக்கும் எஸ்.டி.ஏ.டி., ஆக்கி இந்தியா சார்பில் உற்சாமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தீவிர பயிற்சி

ஸ்பெயின் நாட்டில் நடந்த 4 நாடுகள் போட்டியில் கலந்து கொண்டு 3-வது இடத்தை பிடித்த ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி இன்று அதிகாலை விமானம் மூலம் சென்னை வந்து சேருகிறது. சீனா, பாகிஸ்தான் அணிகள் இரவில் வந்தடைகின்றன.

இதற்கிடையே, சென்னை எழும்பூரில் உள்ள ஆக்கி ஸ்டேடியத்தில் நேற்று மாலை 3.30 முதல் 4.30 மணி வரை தென்கொரியா அணியினர் பயிற்சி மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து ஜப்பான், மலேசியா அணிகள் தலா ஒரு மணி நேரம் தீவிர பயிற்சியில் ஈடுபட்டன.

முன்னதாக தென்கொரியா அணியின் தலைமை பயிற்சியாளர் சியோக் யோ ஷின் கூறுகையில், ‘இந்த போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். அடுத்த ஆண்டு பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி சுற்றான ஆசிய விளையாட்டுக்கு சிறந்த முறையில் தயாராக இந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை பயன்படுத்தி கொள்வோம். ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துதே எங்களது நோக்கமாகும்’ என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.