முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் 18 வயது நிரம்பிய குழந்தைகள் முதிர்வுத் தொகை பெற அழைப்பு

சென்னை: முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் பதிவு செய்துள்ள 18 வயது நிரம்பிய பெண் குழந்தைகள், முதிர்வுத் தொகையை பெற்றுக் கொள்ளுமாறு சமூக நலத்துறையின் ஆணையர் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனம் வாயிலாக ‘முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 2001 முதல் மார்ச் 2023 வரை 9 லட்சத்து 56 பெண் குழந்தைகள் பதிவு செய்துள்ளனர்.

குடும்பத்தில் பிறந்த ஒரே ஒருபெண் குழந்தைக்கு ரூ.50 ஆயிரத்துக்கான நிலை வைப்புத்தொகையும், 2 பெண் குழந்தைகளுக்கு தலாரூ.25 ஆயிரத்துக்கான நிலைவைப்புத் தொகையும் குழந்தைகளின் பெயரில் முதலீடு செய்யப்படும். அதேபோல முதல் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தையும், 2-வது பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகள் என மொத்தம் 3 பெண் குழந்தைகள் இருந்தால், சிறப்பு அனுமதியின் பேரில் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் தலா ரூ.25 ஆயிரம் முதலீடு செய்யப்படும்.

இதில் பயன்பெற குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். அதேநேரம் 2-வது பெண் குழந்தை பிறந்து 3 ஆண்டுக்குள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். பெற்றோர்களில் ஒருவர் 40 வயதுக்குள் குடும்ப கட்டுப்பாடு செய்திருக்க வேண்டும். மேலும் பெண் குழந்தைகள் 10-ம் வகுப்பு எழுதி, 18 வயது வரை குழந்தை திருமணம் புரியாமல், இருக்கும் நிலையில் அவர்களுக்கு வட்டியுடன் கூடிய வைப்புத்தொகை, முதிர்வுத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் 2001 முதல் 2005 வரை பதிவு செய்த பெண் குழந்தைகளில் 18 வயதை நிறைவு செய்த 1 லட்சத்து 40,003 பெண் குழந்தைகளுக்கு ரூ.350.28 கோடி முதிர்வுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளன. இதற்கிடையே 1.5 லட்சத்துக்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் 18 வயது நிறைவடைந்தும் இதுவரை முதிர்வுத் தொகைக்கு விண்ணப்பிக்காமல் உள்ளனர்.

இதையொட்டி அனைத்து மாவட்ட சமூக நல அலுவலகங்களில், மாதந்தோறும் 2-ம் செவ்வாய்க்கிழமை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் முதல்வரின் பெண்குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் வாயிலாக பயன்பெற விரும்புவோர், 18 வயது நிரம்பிய பெண் குழந்தைகள் முதிர்வுத் தொகைக்காக விண்ணப்பிப்போர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் முதல்வரின் பெண்குழந்தை பாதுகாப்பு திட்டத்தின்கீழ், பதிவு செய்து 18 வயது நிரம்பிய குழந்தைகள் ஒரு மாதத்துக்குள், தங்களது பெயரில் தொடங்கிய புதிய வங்கிக் கணக்கின் புத்தகநகலுடன், மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி முதிர்வுத் தொகையை பெற்றுக்கொள்ளுமாறு சமூக நலத்துறை ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.