ஆக்சிஜன் மாஸ்க்குக்கு பதிலாக டீ கப்.. "ரொம்ப சாதாரண விஷயம்".. மா. சுப்பிரமணியன் புது விளக்கம்

காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் சிறுவனுக்கு ஆக்சிஜன் மாஸ்க்குக்கு பதிலாக டீ கப்பை பயன்படுத்தி சிகிச்சை அளித்த சம்பவம் பூதாகரமாகியுள்ள நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தந்துள்ள விளக்கம் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் பகுதியில் அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சில தினங்களுக்கு முன்பு மூச்சுவிடுவதற்கு சிரமமான நிலையில் பள்ளி மாணவன் வந்துள்ளான். அவனை பரிசோதித்த மருத்துவர், அவனுக்கு நெபுலைசிங் சிகிச்சை (நெஞ்சு சளியை இளக்கும் முறை) கொடுக்குமாறு கூறியுள்ளார். இந்த நெபுலைசர் கருவியில் ஆக்சிஜன் குடுவை மாட்டப்பட்டிருக்கும். அதை மூக்கில் மாட்டிக்கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும்.

ஆனால், அந்த சிறுவனுக்கோ ஆக்சிஜன் குடுவைக்கு பதிலாக காகித டீ கப் மூக்கில் மாட்டி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளின் தரம் இப்படிதான் இருக்கிறது என பலரும் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

உத்திரமேரூர் அரசு மருத்துவனையில் புறநோயாளிகள் பிரிவில் கடந்த 27-ம் தேதி நேசன் என்கிற 11 வயது சிறுவன் அனுமதிக்கப்படுகிறான். அவனுக்கு லேசான மூச்சு இளைப்பு இருந்துள்ளது. அவனை பரிசோதித்த மருத்துவர் அருணா ஜோதி, அவனுக்கு நெபுலைசிங் சிகிச்சை அளிக்குமாறு செவிலியரிடம் கூறியுள்ளார். அந்த செவிலியரும் ஆக்சிஜன் மாஸ்க்கை கொண்டு வந்து சிறுவனுக்கு மாட்டி இருக்கிறார். ஆனால் சிறுவனின் தந்தை, அந்த மாஸ்க் பல பேர் பயன்படுத்தியது என்பதால் கிருமித்தொற்று இருக்கும். எனவே அதை மாட்ட வேண்டாம் எனக் கூறியிருக்கிறார்.

அவர் தொடர்ந்து வாக்குவாதம் செய்து பின்னர் தன்னிடம் இருந்த காகித டீ கப்பை கொடுத்து இதிலேயே நெபுலைசிங் சிகிச்சை கொடுக்குமாறு கூறியிருக்கிறார். அதனால் வேறு வழியில்லாமல் இந்த டீ கப்பை செவிலியர் மாட்டியுள்ளார். பின்னர் அவரே இதை வீடியோ எடுத்து பத்திரிகைகளுக்கு கொடுத்துள்ளார். அதன் பிறகு நான் விசாரணை நடத்தியதில் இந்த விஷயம் தெரியவந்தது. என்னதான் சிறுவனின் தந்தை சொல்லி இருந்தாலும், நீங்கள் செய்தது தவறு எனக் கூறி அதற்கு உரிய நடவடிக்கையை சம்பந்தப்பபட்டவர்கள் மீது எடுக்க நான் உத்தரவிட்டிருக்கிறேன்.

இது ரொம்ப சிறிய விஷயம்தான். ஆனால் இதை ஊடகங்கள் இவ்வளவு பெரிதுப்படுத்தியது உண்மையில் வருத்தம் அளிக்கிறது. சிறுவனுக்கு வலுக்கட்டாயமாக பிளாஸ்டி கப்பை எடுத்து திணித்த மாதிரியும், அந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் மாஸ்க்கே இல்லை என்பது போலவும் பொய்யான தகவல்கள் பரப்பப்படுவது சரியல்ல. இவ்வாறு மா. சுப்பிரமணியன் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.