மணிப்பூரில் நடந்து வரும் வன்முறை சம்பவங்கள் குறித்து ஒட்டுமொத்த நாடும் கவலை தெரிவித்து வருகின்றன. இந்த சூழலில் ஹரியானா மாநிலத்தில் யாரும் எதிர்பாராத வகையில் புதிதாக ஒரு கலவரம் வெடித்துள்ளது. இங்கு முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக அரசு நடைபெற்று வருகிறது. இதென்ன, பாஜக ஆளும் மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் கலவரங்கள் வெடிக்கின்றன? என்ற கேள்வி எழுகிறது. போதாக் குறைக்கு ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக் பெரிய குண்டை தூக்கி போடும் வகையில் ஒரு கருத்தை முன்வைத்துள்ளார். அதாவது, ஹரியானா மாநிலத்தின் நூஹ் கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் 2024 மக்களவை தேர்தல் வரை ஏராளமாக நடக்கும் என அதிர்ச்சியூட்டி இருக்கிறார்.
இந்நிலையில் ஹரியானா மாநில அரசை கடுமையாக விமர்சித்து உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் மாயாவதி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் அவர் பேசுகையில், இதுபோன்ற சமூக ரீதியிலான மோதல்கள் தவிர்க்கப்பட வேண்டியவை. ஹரியானாவில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை முழுவதும் கைமீறிப் போய்விட்டது. இன்னும் சொல்லப் போனால் மணிப்பூர் நிலவரத்தை போல் மாறியிருக்கிறது. அம்மாநிலத்தின் உளவுத்துறை முழு தோல்வியை தழுவியுள்ளது. இவை அனைத்தும் மிகவும் கவலை அளிப்பதாக தெரிவித்தார்.
மேலும் பேசுகையில் சம்பந்தமே இல்லாமல் குருகிராமிலும் கலவரம் பரவியுள்ளது. இதனால் பொதுச் சொத்திற்கு மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்கிறது என்று மாயாவதி பேசியுள்ளார்.