பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தொழிற்சங்கப் பிரதிநிதிகளை அழைத்து திணைக்களத்தில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக தலைமையில் கலந்துரையாடல் (31) இடம்பெற்றுள்ளது.
புதிய வரி கோப்புக்களை ஆரம்பிப்பது குறித்து அரசாங்கத்தினால் இலக்கொன்று வழங்கப்பட்டுள்ளபோதும், இதனை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து இங்கு நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் தற்பொழுது பயன்படுத்தப்படும் RAMIS கணினிக் கட்டமைப்பைப் பயன்படுத்திப் புதிய வரிக் கோப்புக்களை ஆரம்பிப்பதில் பாரிய கால தாமதம் ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டிய தொழிற்சங்கப் பிரதிநிதிகள், இதனை முறைப்படுத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் எனச் சுட்டிக்காட்டினர்.
RAMIS கணினிக் கட்டமைப்பிலிருந்து முழுமையான பயனைப் பெற வேண்டுமாயின் அதனைச் செயற்படுத்துவதற்கான பொறுப்பை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஏற்றுக்கொள்வதுடன், இதனைப் பராமரிப்பது தொடர்பில் அரச தனியார் பங்குடமையொன்று ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம் என குழுவின் தலைவர் வலியுறுத்தினார். 13 அரசு நிறுவனங்களை இணைத்து உருவாக்கப்படவுள்ள ஒருங்கிணைந்த தகவல் அமைப்பில் இணைந்துகொள்ளுமாறும் திணைக்களத்துக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான வரிக் கோப்புகளைத் திறப்பதற்கு தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் எதிர்காலத்தில் நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் இணைந்து கையடக்கத்தொலைபேசி செயலியின் (Mobile App) மூலம் உரிய தகவல்களை சேகரித்து உரிய தகவல் கட்டமைப்பை உருவாக்குமாறும் குழுவின் தலைவர் அறிவுறுத்தினார்.
அதிக எண்ணிக்கையிலான வரி செலுத்துவோரைப் (bulk registration) பதிவு செய்யும்போது RAMIS கணினிக் கட்டமைப்பைபில் காணப்படும் தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக அதனை மேற்கொள்ள முடியாதிருப்பதால், பெயர் மற்றும் தேசிய அடையாள அட்டையை கட்டாய அங்கமாகக் கருதுமாறும், மின்னஞ்சல் முகவரி, கிராமசேவர் பிரிவு போன்ற விபரங்கள் கட்டாயமாக வழங்கப்பட வேண்டும் என்பதை நீக்கவேண்டியதன் அவசியம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், திணைக்களத்தில் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் குழுவின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.
நிர்வாக ரீதியில் காணப்படும் பிரச்சினைகளை திணைக்களத்திற்குள்ளேயே தீர்த்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார்.