சென்னை: தமிழகத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தை அண்ணா பிறந்த நாளான செப்.15-ம் தேதி அவர் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது அளித்த வாக்குறுதிப்படி, குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம், இந்தாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டதுடன், செப்.15-ம் தேதி அண்ணா பிறந்த தினத்தன்று திட்டம் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
திட்டத்தை செயல்படுத்தும் முறை, பயனாளிகள் யார், தகுதிகள், விண்ணப்பம் வழங்குவது குறித்து முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அத்துடன் கருணாநிதி நூற்றாண்டை ஒட்டி, ’கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்’ என இத்திட்டத்துக்கு பெயரிடப்பட்டது.
இதையடுத்து இரண்டு கட்டமாக விண்ணப்பங்கள் வழங்கி, அவற்றை பதிவு செய்து தகுதியானவர்களைத் தேர்வு செய்ய முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, முதல்கட்டமாக கடந்த ஜூலை 24-ம்தேதி முதல் 3 நாட்கள் நியாயவிலைக்கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. இதை தருமபுரியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதன்பின், ஜூலை 27-ம் தேதி முதல் சிறப்பு முகாம்கள் மூலம் விண்ணப்பப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் ஆக.4-ம் தேதியுடன் முடிந்ததும், இரண்டாம் கட்ட விண்ணப்பப் பதிவு ஆக.5 முதல் 16-ம் தேதி வரை நடைபெறும். இதற்கான விண்ணப்ப விநியோகம் நேற்று (ஆக.1) தொடங்கியது.
விண்ணப்பங்கள் அனைத்தும் இதற்கென உருவாக்கப்பட்ட செயலியில் பதிவு செய்யப்பட்டு, தகுதியான பயனாளிகளுக்கு செப்.15-ம் தேதி முதல் அவரவர் வங்கிக் கணக்குகளில் மாதம் ரூ.1000 பணம் வரவுவைக்கப்பட உள்ளது.
இந்நிலையில், இத்திட்டத்தை அண்ணா பிறந்த தினமான செப்.15-ம் தேதி, அவர் பிறந்த காஞ்சிபுரத்தில் தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, காஞ்சிபுரத்தில் அன்று நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான இடம் தேர்வுசெய்யும் பணியில் மாவட்ட நிர்வாகம், முதல்வரின் அலுவலக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
காஞ்சிபுரத்தில், பயனாளிகள் சிலருக்கு நேரடியாக உரிமைத்தொகை வழங்கும் முதல்வர், அப்போதே வங்கிக்கணக்கில் மீதமுள்ளவர்களுக்கு பணத்தை செலுத்தும் வசதியையும் தொடங்கி வைப்பார் என கூறப்படுகிறது.