கிருஷ்ணகிரி பட்டாசு கிடங்கு வெடி விபத்து நடந்த இடத்தில் கோவை மேற்கு மண்டல ஐஜி, சேலம் டிஐஜி ஆய்வு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பட்டாசு கிடங்கு வெடி விபத்து நடந்த இடத்தில் கோவை மேற்கு மண்டல ஐஜி மற்றும் சேலம் டிஐஜி நேரில் ஆய்வு செய்தனர்.

கிருஷ்ணகிரி பழையபேட்டையில் கடந்த மாதம் 29-ம் தேதி பட்டாசு குடோன் ஒன்றில் நடந்த வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் அந்த குடோன் மற்றும் அருகில் உள்ள 6 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. அருகில் இருந்த ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன. மேலும் சாலையில் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் பலரும், சுற்று வட்டாரத்தில் உள்ள கடைகளில் இருந்தவர்களும் காயம் அடைந்தனர்.

இதே போல விபத்து நடந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ஆட்டோ, இருசக்கர வாகனங்களும் சேதமடைந்தன. இந்த வெடி விபத்து ஓட்டலில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்தால்தான் ஏற்பட்டது என தடயவியல் நிபுணர்கள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், உணவுத்துறை அமைச்சருமான சக்கரபாணி தெரிவித்தார். மேலும், இந்த வெடி விபத்து தொடர்பாக நீதி விசாரணையை சிறப்பு டிஆர்ஓ. பவணந்தி தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே வெடி விபத்தில் உயிரிழந்த ஓட்டல் உரிமையாளர் ராஜேஸ்வரின் குடும்பத்தினர், வெடி விபத்திற்கு சிலிண்டர் காரணமில்லை என விசாரணை குழுவில் எழுத்துபூர்வமாக தெரிவித்துள்ளனர்.

மேலும், அதிமுக எம்பி தம்பிதுரை மாநிலங்களவை விபத்து தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி அளித்த பதிலில், கிருஷ்ணகிரியில் சிலிண்டர் வெடித்ததால் பட்டாசு வெடி விபத்து ஏற்படவில்லை. கேஸ் சிலிண்டர் தானாக வெடிக்காது என தெரிவித்துள்ளார். மேலும், சிபிஐ அல்லது தேசிய புலனாய்வு பிரிவு விசாரணை நடத்திட வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு, அதிமுக எம்பி தம்பிதுரை கடிதம் எழுதி உள்ளார். எனவே, இந்த வெடி விபத்துக்கு சிலிண்டர் வெடித்தது காரணமா அல்லது சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள் காரணமா என்கிற சர்ச்சை நீடித்து வருகிறது.

இந்நிலையில், கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐஜி சுதாகர், சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி ஆகியோர் புதன்கிழமை கிருஷ்ணகிரிக்கு வந்தனர். அவர்கள் பட்டாசு கிடங்கு விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இடிந்த கட்டிடங்களை பார்வையிட்ட அவர்கள் உடல்கள் தூக்கி வீசப்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அத்துடன், சம்பவ இடத்தை 2 ட்ரோன் கேமராக்கள் மூலமாக பதிவு செய்த அவர்கள், விபத்து நடந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சேகரித்து ஆய்வு செய்தனர்.

இதேபோல் ஓட்டல் உரிமையாளர் குடும்பத்தினரிடம், ஐஜி சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். இதுகுறித்து கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகரிடம் கேட்ட போது விசாரணை நடந்து வருவதாகவும், முழுமையான தகவல்கள் விசாரணைக்கு பிறகே தெரியவரும் என்றும் கூறினார். அப்போது கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாக்கூர், ஏடிஎஸ்பிக்கள் விவேகானந்தன், சங்கு, கிருஷ்ணகிரி டிஎஸ்பி தமிழரசி, தனிப்பிரிவு போலீஸ் அலுவலர்கள், நகர போலீஸார் உடனிருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.