சென்னை: என்எல்சி சேதப்படுத்திய பயிருக்கு இழப்பீடு வழங்க கோரிய வழக்கு விசாரணையின்போது, “நெல்லுக்குப் பதிலாக தக்காளி பயிரிட்டிருந்தால், கூடுதல் இழப்பீடு கிடைத்திருக்கும்” என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது, உயர் நீதிமன்றத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி நிர்வாகம் இரண்டு சுரங்க விரிவாக்க பணிக்காக கரிவெட்டி, மேல்வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களில் நிலங்களை 2007-ம் ஆண்டு கையகப்படுத்தியது. சம்பந்தப்பட்ட இடங்களில் வாய்க்கால் வெட்டும் பணியின்போது பயிர்கள் சேதப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு வலுத்த நிலையில், சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் அறுவடை செய்யப்படும் வரை விவசாயிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி பாதிக்கப்பட்ட விவசாயி முருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீட்டுத் தொகையாக நிர்ணயித்து உத்தரவு பிறப்பித்தது.
இந்த இழப்பீட்டுத் தொகையை வரும் ஆக.6-ம் தேதிக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும், செப்டம்பர் 15-ம் தேதிக்கு பின்னர் அந்த நிலத்தில் விவசாய பணிகள் எதுவும் மேற்கொள்ளக் கூடாது. கையகப்படுத்தப்பட்ட நிலத்தை என்எல்சி பாதுகாக்க வேண்டும். நிலத்தின் முன்னாள் உரிமையாளர்கள் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தினால் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கலாம் என உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இந்த உத்தரவை நீதிபதி பிறப்பித்துக் கொண்டிருந்தபோது, குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பாலு, “அந்த நிலத்தில் நெல்லுக்குப் பதிலாக தக்காளி பயிரிட்டிருந்தால், கூடுதல் இழப்பீடு கிடைத்திருக்கும்” என்று கூறினார். அப்போது நீதிபதி, “தக்காளி பயிரிட்டிருந்தால், அரசே அதை கொள்முதல் செய்திருக்கும்” என்று தெரிவித்தார். அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர், “தக்காளிக்குப் பதில் மாம்பழம் பயிரிட்டிருக்க வேண்டும்” என்றார். இந்த விவாதம் நீதிமன்ற அறையில், சிரிப்பலையை ஏற்படுத்தியது.