டுனெடின்,
அமெரிக்கா- போர்ச்சுகல் டிரா
32 அணிகள் பங்கேற்றுள்ள பெண்களுக்கான 9-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகிறது. இதில் டுனெடின் நகரில் நேற்று நடந்த (இ பிரிவு) ஆட்டம் ஒன்றில் நெதர்லாந்து 7-0 என்ற கோல் கணக்கில் அறிமுக அணியான வியட்நாமை ஊதித்தள்ளியது. அந்த அணியில் எஸ்மீ புட்ஸ் (18-வது, 57-வது நிமிடம்), ஜில் ரோர்ட் (23-வது, 83-வது நிமிடம்) தலா 2 கோல் அடித்தனர்.
இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ அணியுமான அமெரிக்கா, அறிமுக அணியான போர்ச்சுகலை சந்தித்தது. 4 முறை சாம்பியனான அமெரிக்கா எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அமெரிக்காவுக்கு கடும் குடைச்சல் கொடுத்த போர்ச்சுகல் அணி கடைசி நிமிடத்தில் கோல் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டது. காயம் உள்ளிட்ட விரயங்களுக்காக வழங்கப்படும் கூடுதல் நேரத்தில் (இஞ்சுரி டைம்) போர்ச்சுகல் வீராங்கனை அனா காபிடா அடித்த ஷாட் கோல் கம்பத்தில் பட்டு நூலிழைவில் வெளியேறியதால் அமெரிக்கா அதிர்ச்சியில் இருந்து தப்பியது.
‘இ’ பிரிவில் நெதர்லாந்து 7 புள்ளியுடன் (2 வெற்றி, ஒரு டிரா) முதலிடமும், அமெரிக்கா 5 புள்ளியுடன் (ஒரு வெற்றி, 2 டிரா) 2-வது இடமும் பிடித்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறின. போர்ச்சுகல் (4 புள்ளி) 3-வது இடமும், வியட்நாம் (0) கடைசி இடமும் பெற்று வெளியேறின.
இங்கிலாந்து அபாரம்
அடிலெய்டில் நடந்த (டி பிரிவு) ஆட்டம் ஒன்றில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து 6-1 என்ற கோல் கணக்கில் சீனாவை விரட்டியடித்து தொடர்ச்சியாக 3-வது வெற்றியை ருசித்ததுடன் தனது பிரிவில் முதலிடம் (9 புள்ளி) பிடித்து அடுத்த சுற்றை எட்டியது. இதே போல் டென்மார்க் 2-0 என்ற கோல் கணக்கில் ஹைதீ அணியை வீழ்த்தி 2-வது வெற்றியுடன் (6 புள்ளிகள்) 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றது. சீனா (3 புள்ளி), ஹைதீ (புள்ளி இல்லை) அணிகள் மூட்டையை கட்டியது.
இன்றைய லீக் ஆட்டங்களில் அர்ஜென்டினா-சுவீடன், தென்ஆப்பிரிக்கா-இத்தாலி, பனாமா-பிரான்ஸ், ஜமைக்கா-பிரேசில் அணிகள் மோதுகின்றன.