ஹெச்.டி.எஃப்.சி இன்ஃபினியா கிரெடிட் கார்டு (HDFC Bank Infinia Credit Card) வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்ஃபினியா கிரெடிட் கார்டுக்கு வழங்கப்படும் ரிவார்டுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தினசரி வரம்பை ஹெச்.டி.எஃப்.சி வங்கி நீக்கியுள்ளது.
கிரெடிட் கார்டுகளுக்கான சலுகைகளைப் போட்டி நிறுவனங்கள் குறைத்துவரும் நிலையில், ஹெச்.டி.எஃப்.சி வங்கி தனது இன்ஃபினியா கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு ரிவார்டுகளுக்கான தினசரி வரம்பை ரத்து செய்துள்ளது.
ஹெச்.டி.எஃப்.சி இன்ஃபினியா கிரெடிட் கார்டுகளுக்கு மாதந்தோறும் அதிகபட்சமாக 15,000 ரிவார்டு பாயிண்டுகள் கிடைக்கும். மாதத்துக்கான வரம்பு 15,000-ஆக இருந்தாலும் கூட, ஒரு நாளுக்கு 7,500 ரிவார்டு பாயிண்டுகள் மட்டுமே வழங்கப்படும் என தினசரி வரம்பு விதித்திருந்தது ஹெச்.டி.எஃப்.சி வங்கி. இது வாடிக்கையாளர்களுக்கு சற்று அசவுகரியமான கட்டுப்பாடாக இருந்துவந்தது.

இந்நிலையில், இந்த தினசரி வரம்பை ஹெச்.டி.எஃப்.சி வங்கி ரத்து செய்துள்ளது. இனி ஹெச்.டி.எஃப்.சி இன்ஃபினியா கிரெடிட் கார்டுகளுக்கு மாதந்தோறும் 15,000 ரிவார்டு பாயிண்டுகள் கிடைக்கும். அதே போல, ஒரே நாளில்கூட 15,000 ரிவார்டு பாயிண்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.
வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மற்ற சில வங்கிகள் கிரெடிட் கார்டுகளுக்கான சலுகைகளைக் குறைத்துள்ளன. இந்த நிலையில், ஹெச்.டி.எஃப்.சி வங்கி இன்ஃபினியா கிரெடிட் கார்டுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளதற்கு வாடிக்கையாளர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.