மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே பாலையூர் காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட கோமல் கிராமத்தில், ஊராட்சி மன்றத் தலைவியாக இருப்பவர் எழிலரசி. இவரின் கணவர் பாலசுப்பிரமணியன், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கிராம நாட்டாமையாக இருந்திருக்கிறார். அப்போது கோமல் கிராமத்தில் திருமண மண்டபம் கட்டுவதாகக் கூறி, அந்தப் பகுதியிலுள்ள குளத்திலிருந்து மண் எடுத்து, விற்பனை செய்திருக்கிறார். அதில் பணம் கிடைத்ததாகத் தெரிகிறது.

அந்தப் பணத்தின் மூலம் தொடங்கப்பட்ட திருமண மண்டபம் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இந்தப் பணிக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில், ரூ.40 லட்சத்துக்கு பாலசுப்பிரமணியன் உரிய கணக்கு காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக கிராம மக்கள் அவரை கிராம நாட்டாமை பொறுப்பிலிருந்து நீக்கியிருக்கின்றனர். இதனால் இரு தரப்பினரிடையே முன்விரோதம் இருந்திருக்கிறது.
இந்த நிலையில், பாலசுப்பிரமணியன் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்காக அவரின் வீட்டின் பின் பகுதியிலிருந்து நேற்று முன்தினம் மண் எடுத்திருக்கிறார். இதற்கு வடக்குத்தெருவைச் சேர்ந்த செல்வராஜ் (60), குணசேகர் (43) ஆகியோர் பாலசுப்பிரமணியனிடம், `மண் எடுத்தால் மழையின்போது எங்கள் வீட்டுக்கு தண்ணீர் வரும்’ என சண்டையிட்டிருக்கின்றனர். மேலும் பாலையூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 15 பேர் அரிவாள், உருட்டுக்கட்டை, கற்கள் ஆகியவற்றைக் கொண்டு செல்வராஜ் , குணசேகர் ஆகியோரைத் தாக்கியதாகத் தெரிகிறது.
இதில், செல்வராஜ், குணசேகர் ஆகியோரின் தலையில் அரிவாள் வெட்டுபட்டு, படுகாயம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் அவர்களின் உறவினர்கள் மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கின்றனர். இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டதாகத் தெரிகிறது.

குணசேகரன்
இந்த நிலையில், செல்வராஜ், குணசேகரன்மீது பாலசுப்பிரமணியன் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட பாலசுப்பிரமணியன், அவரின் மகன் ராம்குமார், ரஞ்சித், காமராஜ் ஆகிய 4 பேர்மீது பாலையூர் போலீஸார் வழக்கு பதிவுசெய்டிருக்கின்றனர்.
இதையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட அனைவரையும் கைதுசெய்ய வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். ஊராட்சி மன்றத் தலைவியின் கணவர் தாக்குதல் நடத்தியது, அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.