சென்னை: நாடு முழுவதும் தக்காளி விலை உயர்வு இன்று பேசுபொருளாக மாறியுள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விலையில் கிலோ ரூ.150-க்கும், சில்லறை விலையில் ரூ.200-க்கும் விற்கப்படுகிறது. வெளிச்சந்தைகளில் ரூ.210-க்கு மேல் விற்கப்படுகிறது.
விவசாயிகளும், வியாபாரிகளும், பொதுமக்களும், இதுவரை பார்க்காத அளவுக்கு, வரலாறு காணாத விலை உயர்வை தக்காளி எட்டியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:
தேசிய அளவில் 8.42 லட்சம் ஹெக்டேரில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. அவற்றிலிருந்து 2.60 கோடி டன் தக்காளி உற்பத்தியாகிறது. நாட்டில் தக்காளி உற்பத்தியில் மத்தியப் பிரதேசம் ஆண்டுக்கு 1.2 லட்சம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்து, 27 லட்சம் டன் உற்பத்தியுடன் முதலிடத்தில் உள்ளது.
ஆந்திர மாநிலம் 57 ஆயிரம் ஹெக்டேர் பரப்பு, 23 லட்சம் டன் உற்பத்தியுடன் 2-ம் இடத்திலும், கர்நாடக மாநிலம் 70 ஆயிரம் ஹெக்டேர் பரப்பு, 21 லட்சம் டன் உற்பத்தியுடன் 3-ம் இடத்திலும் உள்ளன. தமிழகம் 54 ஆயிரம் ஹெக்டேர் பரப்பு, 16.23 லட்சம் டன் உற்பத்தியுடன் 6-ம் இடத்தில் உள்ளது. இதனால் தமிழக தக்காளி தேவைக்கு பிற மாநிலங்களையே நம்பியிருக்க வேண்டியுள்ளது.
தேசிய அளவில் தமிழகம் மொத்த சாகுபடி பரப்பில் 6 சதவீதமும், உற்பத்தியில் 8 சதவீதமும் பங்களிக்கிறது. தமிழகத்தில் மொத்த உற்பத்தியில் 56 சதவீதம் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நடைபெறுகிறது.
தக்காளி விதைவிட்டு 25 நாட்கள் பண்ணையில் இருக்க வேண்டும். நடவு செய்த பிறகு 55 நாட்களுக்கு பிறகே அறுவடைக்குத் தயாராகும். இதற்கு முன்பு 6 முதல் 8 மாதங்கள் வரை தக்காளி செடிகள் பலன் தரும். தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் பலன் தரும் காலம் 10 முதல் 12 மாதங்களாக உயர்ந்துள்ளன.
வழக்கமாக 32 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை உயர்ந்தால் தக்காளிச் செடிகளில் மகரந்தச் சேர்க்கை நடக்காது. காய் பிடிப்பு பாதிக்கப்படும். தற்போது, தென் மாநிலங்கள் மட்டுமல்லாது நாடு முழுவதும் கடந்த ஜூன் மாதம் கடும் வெயில் நிலவியதால் உற்பத்தி குறைந்தது.
செப்டம்பர் வரை நீடிக்கும்: தக்காளி விலை ரூ.100-ஐ தொடும்போது, ஆகஸ்ட்டில் நிலைமை சரியாகும் என கணித்திருந்தோம். அதற்குள் ஜூலையில் தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்த்ததால், தக்காளி பயிர்கள் அழிந்தன. அதனால் விலை உயர்வு செப்டம்பர்வரை நீடிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பல்வேறு துறை அதிகாரிகளுடன் அண்மையில் ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழகத்தில் தக்காளி சாகுபடி பரப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தக்காளி விதைத்த 60நாளில் இருந்தே அறுவடைக்குத் தயாராகும் ரகங்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று கோவை வேளாண் பல்கலைக்கழகத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் தக்காளி உற்பத்திபரப்பை அதிகரிக்க, தோட்டக்கலைத் துறை சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கம் உள்ளிட்டதிட்டங்கள் மூலமாக ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் மானியம், குச்சிகளை நட ரூ.25 ஆயிரம் மானியம், சிறு குறு விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனக் கட்டமைப்புக்கு 100 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
வெப்பநிலை உயர்வு ஏன்? இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அரபிக் கடலில் ‘பிப்பர்ஜாய்’ அதிதீவிர புயல் உருவானது. இந்தபுயல் நீண்ட நாட்கள் அரபிக் கடலில்நீடித்தது. இதன் காரணமாக கேரளாவில் வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்கக் கூடிய தென்மேற்கு பருவமழை, தாமதமாக ஜூன் 28-ம் தேதிதான் தொடங்கியது. இதனால் ஜூன் மாதம் முழுவதும் உள் மாவட்டங்களாக உள்ள ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு எல்லையோர மாவட்டங்களில் கடும் வெப்பம் நிலவியது.
மேலும், கடந்த மே மாதத்தில் வங்கக் கடலில் ‘மொக்கா’ புயல் உருவானதால், தமிழகம் மற்றும் ஆந்திரப் பகுதிகள் நோக்கி வீசும்கிழக்கு திசை காற்றும் திசை மாறியது. இதனால் உள் மாவட்டங்களில் மே மாதமும் கடும் வெப்பம் நிலவியது.
வரலாறு காணாத வெப்பம்: ஜூன் மாத வெப்பநிலை நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ஜூன் மாதத்தில் தென்னிந்தியப் பகுதிகளில் அதிகபட்ச சராசரி வெப்பநிலை 34.05 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இந்தமாதத்தில் வழக்கமாக பதிவாகும் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 32.47 டிகிரி செல்சியஸ். வழக்கத்தை விட 1.58 டிகிரி அதிகரித்துள்ளது. 1901-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை, ஜூன் மாதங்களில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை சராசரி இந்த அளவுக்கு பதிவாகி இருப்பது இதுவே முதல்முறை” என குறிப்பிட்டுள்ளது.