இளையராஜாவுக்கு 9 மொழிகளில் 2300 பேர் பிறந்தநாள் வாழ்த்து கூறி உலக சாதனை

வட அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் டேம்பாவில் அருள்மிகு சாஸ்தா (ஸ்ரீ ஐயப்பா சொசைட்டி ஆப் டேம்பா) கோயில் சார்பில் நிதி திரட்டுவதற்காக முதல் முறையாக மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

இளையராஜா, பின்னணிப் பாடகர்கள் மனோ, எஸ்.பி.பி.சரண், யுகேந்திரன் வாசுதேவன், பாடகிகள் ஸ்வேதா, சுனிதா, விபவாரி, பிரியா, சூர்முகி, அனிதா, மற்றும் இசைக்கருவி வாசிப்பாளர்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இவர்களை டேம்பா விமான நிலையத்தில், நகர மேயரின் பிரதிநிதி, விமான நிலைய தலைமை நிர்வாக அதிகாரி, மற்றும் டேம்பா அய்யப்பா கோவில் நிர்வாகிகள் வரவேற்றனர்.

டேம்பா வந்த இவர்கள் முதற்கட்டமாக அருள்மிகு டேம்பா அய்யப்பன் ஆலயத்திற்கு வந்து அய்யப்பனை வழிபட்டனர். அப்போது அவர்களை சாஸ்தா அய்யப்பா கோவில் அறங்காவலர் குழு சார்பாக, செயல்குழு தலைவர் விஜயராகவன் நாராயணஸ்வாமி, மற்றும் கோவில் குருக்கள், பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்றனர். ஐய்யப்பன் வழிபாட்டை தொடர்ந்து தலைவாழை இலையில் அனைவருக்கும் விருந்து பரிமாறி களிக்க வைத்தனர் சாஸ்தா கோவில் நிர்வாகத்தினர்.

டேம்பாவில் முதல் முறையாக நடைபெற்ற இந்த மறக்க முடியாத இளையராஜா குழுவினரின் பிரதான இன்னிசை நிகழ்ச்சியில் டேம்பா மற்றும் சுற்றியுள்ள ஊர்களிலிருந்தும் மற்றும் 15க்கும் மேற்பட்ட வட அமெரிக்கா மாநிலங்களில் இருந்து 2300-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் பங்கேற்று ரசித்தனர். இசைஞானியின் இன்னிசை குழுவினர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் ஹிந்தி மொழிகளில் இன்னிசை பாடல்களை பாடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை இசை இன்ப வெள்ளத்தில் மகிழ்வித்தனர்.

குறிப்பாக இசைஞானியின் இசையில் என்றென்றும் மறக்க முடியாத பாடல்கள் வரிசையில் இடம்பெற்ற ‛‛ஜனனி ஜனனி, ஒம் சிவோஹம், வளை ஓசை கலகலவென, தென்றல் வந்து என்னை தொடும், சின்ன மணி குயிலே, என் இனிய பொன்நிலாவே , ராக்கம்மா கைய தட்டு, தென்பாண்டி சீமையிலே, நிலா அது வானத்து மேலே…'' உள்ளிட்ட மக்கள் மனதில் என்றும் ரீங்காரமாய் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல்களை பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் பாடி அனைவரையும் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவத்தை தந்தனர்.

இசைஞானியின் 80வது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு மகுடம் சேர்க்கும் விதமாக, சாஸ்தா (ஸ்ரீ ஐயப்பா சொசைட்டி ஆப் டேம்பா ), சங்கீதா ரவிச்சந்திரன் முன்னிலை வகிக்க, 2300 மேற்பட்ட இசைப்பிரியர்கள் ஒண்றிணைந்து 9 பாஷையில் பிறந்தநாள் வாழ்த்துரைத்து உலக சாதனை செய்தனர். இசைஞானியின் இன்னிசை பயணத்தின் நிறைவாக அவரின் குழு மற்றும் டேம்பா வாழ் மக்கள், சாஸ்தா கோவில் சார்பாக புளோரிடா வளைகுடா பகுதியில் கப்பலில் பயணம் செய்து, மகிழ்ந்தனர்.

இன்னிசை நிகழ்ச்சியினை சிறப்பாக நடத்திக் கொடுத்த இளையராஜாவுக்கும், அவரின் குழுவினருக்கும், நான்கு வாரமாக அயராது பாடுபட்ட 100க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டர்களுக்கும், மற்றும் நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பித்து முழு ஆதரவையும் அளித்த அனைத்து வடஅமெரிக்க இந்திய உள்ளங்களுக்கும் டேம்பா அய்யப்பா கோவில் சமூக அறங்காவலர்கள் மற்றும் நிர்வாகிகள் நன்றியினை தெரிவித்தனர்.

இன்னிசை நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் வாழ்க்கையில் இளையராஜாவின் நேரடி இசை நிகழ்ச்சியை நாம் கேட்டுவிட்டோம் என்ற மனநிறைவுடன் சென்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.